News

உள்ளக விசாரணையில் சர்வதேச பங்கேற்பு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்!

உள்ளக விசாரணையில் சர்வதேச பங்கேற்பு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்!

உள்ளக விசாரணையில் சர்வதேச பங்கேற்பு நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்!
புதன்கிழமை, 14 ஒக்ரோபர் 2015,

உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்றால் அதனை உரிய முறையில் நம்பகரமாக முன்னெடுக்க முடியும்.
சர்வதேச சட்டவல்லுநர்கள் இதற்கு முன்னரும் இலங்கையின் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது இலங்கைக்கு புதிய விடயமல்ல. எனினும் இதனை பாராளுமன்றத்தின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிவில் சமூக பிரதிநிதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.சி வெலியமுன தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம், உள்ளக பொறிமுறை நீதிமன்றம் ஆகியவைகளுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவைப்படுகின்றது. இது குறித்து அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ளக விசாரணை செயற்பாடுகளில் சர்வதேச சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவது குறித்து பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையில் சர்வதேச பிரதிநிதிகளுடனான பங்களிப்பில் அமைந்த விசாரணைகள் என்பது புதிதல்ல. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க கொலை தொடர்பில் விசாரிக்கப்பட்ட செயற்பாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோன்று உடலாகம ஆணைக்குழுவிலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர். இந்த விடயத்தில் அடிப்படைவாத குழுக்கள் நாட்டு மக்களுக்கு சர்வதேச தலையீடு என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறிவருகின்றன எனவும் ஜே.சி. வெலியமுன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடிப்படைவாதிகளல்ல. அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் ஊடாகவே இந்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். சர்வதேசத்தில் எழுந்துள்ள பிரச்சினை வடக்கு, கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கடந்த காலங்களில் தென்னிலங்கையிலும் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விளைவாகத்தான் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் வெலியமுன எடுத்துரைத்திருக்கின்றார். கடந்த 10 வருடங்களில் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காகவும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவும் பாரியளவில் குரல் கொடுத்துவந்த வெலியமுன இந்த உள்ளக விசாரணை பொறிமுறையில் முக்கியமான விடயங்களை எடுத்துரைத்துள்ளார்.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை சட்டமீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அது எவ்வாறு அமையப்பெற வேண்டும் என்பது குறித்து நாட்டில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் கலந்துரையாடல்களும் ஆரம்பித்துள்ளன.

இந்த விடயத்தில் சிவில் சமூக அமைப்புகளினதும் மதத் தலைவர்களினதும் பங்களிப்பு என்பது மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஒரு சில தரப்பினர் இந்த உள்ளக விசாரணையையும் எதிர்த்து வருகின்ற நிலையில் பெரும்பாலான மக்கள் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நாட்டின் மீதான களங்கம் நீக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலான கருத்தொற்றுமை நாட்டில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் இந்த உள்ளக விசாரணை பொறிமுறையானது எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக அமைந்திருக்கின்றது.

அதாவது தனித்து இலங்கையினால் மட்டும் இந்த விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படுவதா? அல்லது சர்வதேசத்தின் பங்களிப்புடன் மற்றும் சர்வதேசத்தின் ஆலோசனை, தொழில்நுட்ப உதவியுடன் இந்த பொறிமுறையை முன்னெடுப்பதா என்பது தொடர்பிலேயே தற்போது நாடளாவியரீதியில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை சர்வதேச பங்களிப்புடனும், உதவியுடனும் உள்ளக விசாரணையை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பாக ஒரு கருத்துருவாக்க இணக்கப்பாடு எட்டப்படும் என்ற சமிக்ஞை தெரிகிறது. ஆனால் தமிழர் தரப்பை பொறுத்தவரை சர்வதேச உதவிகளை தாண்டிய ஆழமான சர்வதேச ஈடுபாடு உள்ளக விசாரணை பொறிமுறையில் இடம்பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான பின்னணியில் இந்த விசாரணை பொறிமுறை எவ்வாறு அமையும் என்பதில் நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இந்நிலையில் அரசாங்கமானது இம்மாதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து ஜனவரி மாத நடுப்பகுதி வரை இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பாக நாடளாவிய ரீதியில் கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் நடத்தி விட்டு இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்கம் ஒரு அடிப்படை பொறிமுறையை மக்கள் முன் வைக்கவுள்ளதுடன் அது தொடர்பில் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி விட்டு இறுதியில் இறுதி வடிவத்தை தயாரிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளை கொண்ட சர்வகட்சி மாநாட்டையும் மத அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சர்வமத மாநாட்டையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உண்மையில் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையானது சர்வதேச தரத்தில் அமையவேண்டும். அவ்வாறு சர்வதேச தரத்தில் இந்த பொறிமுறை இடம் பெறவேண்டுமானால் அதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படுவது நம்பகத் தன்மைக்கு முக்கிய காரணமாக அமையும்.

அந்த வகையில் சிவில் சமூகப் பிரதிநிதியான ஜே.சி. வெலியமுன கூறியது போன்று உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டில் சர்வதேச பங்களிப்பு இடம் பெறுவதானது அந்த செயற்பாட்டை வலுமிக்கதாக உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இங்கு சர்வதேச பங்களிப்பு என்பது பொதுநலவாய நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டு விசாரணையாளர்களை உள்ளடக்குவதனை குறிப்பிடுகிறது.

அவ்வாறு சர்வதேச குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு இடம் பெறுவது உண்மையில் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பகத் தன்மையை அதிகரிக்குமே தவிர அதனால் பாதிப்புக்கள் ஏற்படும் என்று கூறமுடியாது.

குறிப்பாக இந்த உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டில் சர்வதேச பங்களிப்பு இருக்குமாயின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற்பாட்டையும் உறுதிப்படுத்துவதில் வலுச்சேர்க்கும் என்பதையும் உறுதியாக நம்பலாம். எனவே இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கவுள்ள அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பது பொருத்தமாக அமையும்.

கடந்த காலங்களில் முன்னைய அரசாங்கம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் நம்பகரமான சுயாதீனமான உள்ளக விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே இந்த சர்வதேச பங்களிப்பை வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டது.

எனவே இனியும் தாமதித்துக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமான சர்வதேச பங்களிப்புடனும் சர்வதேச உதவியுடனும் இந்த உள்ளகப் பொறிமுறையை முன்னெடுப்பது இலங்கையை சர்வதேச மட்டத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகாலமாக நீதி கிடைக்காமல் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதன் மூலம் அரசாங்கம் ஒரு நம்பகரமான நிலையை சர்வதேச மட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு ஒரு ஆரோக்கியமான நிலைமை உருவாகுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாடானது சுயாதீனமாகவும் நம்பகரமானதாகவும் அமையவேண்டும்.

அதற்கு இந்த பொறிமுறை செயற்பாட்டில் சர்வதேசத்தின் ஆக்க பூர்வமான பங்களிப்பு இடம் பெறுவது உண்மையில் உள்ளக விசாரணைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

எனவே நாட்டின் எதிர்காலம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் மிகவும் தூர நோக்குடன் சிந்தித்து கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பது சிறப்பாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top