News

தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது நல்லாட்சிக்கு முரணானது!

தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது நல்லாட்சிக்கு முரணானது!

தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது நல்லாட்சிக்கு முரணானது! சாந்தி எம்.பி
வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2015,

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது தடுத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். அத்துடன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்ற கருத்துக்கும் முற்றிலும் முரணானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.
வவுனியாவில் வட மாகாண சுகாதார அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்களின் தேசிய ரீதியிலான பிரச்சனைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்கின்ற விடயமானது காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்ட ஓர் விடயமாகவே இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பவற்றினூடாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளுமின்றி 2 முதல் 20 வருடங்களிற்கும் மேலாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது தடுத்து வைத்திருக்கும் செயற்பாடானது மனிதநேயமற்ற செயலாகும். அத்துடன் நல்லாட்சிக்கான அரசாங்கம் என்ற கருத்திற்கு முற்றிலும் முரணானதாகும்.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முன்னைய அரசாங்கங்கள் இவ்விடயத்தை கவனிக்காது விட்டது போல இவ் அரசாங்கமும் பாரா முகமாக இருக்காமல் கரிசனையுடன் நடந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள 200 இற்கும் அதிகமான தமிழ் அரசியற் கைதிகளின் கோரிக்கையினை கவனத்தில் கொண்டு சாதகமான தீர்வை வழங்க வேண்டியது இவ் அரசாங்கத்தின் அவசியமான பொறுப்பாகும்.

மேலும் அரசியற் கைதிகளின் விடுதலையினை இனவாத மற்றும் பழிவாங்கல் ரீதியில் பார்க்காது தமிழ் அரசியல் கைதிகளினுடைய குடும்பங்களின் பொருளாதார நிலை மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற சமூக ரீதியிலான பிரச்சனைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இவர்களினுடைய விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் .

முன்னைய அரசாங்கம் போராளிகளிற்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்தது. இன்று அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் சேர்ந்து பல்வேறு வகையான தொழில் முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். எனவே ஜனவரி 8ஆம் திகதியின் பின் அமைக்கப்பட்ட இவ் புதிய அரசாங்கமும் தமிழ் மக்களின் பெருவிருப்பான தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது கட்டாயமானதாகும்.

மேலும் பல்வேறுபட்ட பொருளாதார இடர்பாட்டிற்குள் வாழ்கின்ற தமிழ் அரசியற்கைதிகளின் குடும்பத்தாருக்கு அவர்களின் விடுதலையின் மூலம் பல்வேறுபட்ட பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பது உறுதியாகும்.

தமிழ் அரசியற்கைதிகள் என்று எவருமே இல்லை குற்றம் புரிந்தவர்களே சிறைகளில் இருப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்ட நீதியமைச்சரின் கருத்தானது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒவ்வாத கருத்தாகும். எனவே தேவையற்ற கருத்துக்களை விடுத்து தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலையினை துரிதப்படுத்த வேண்டியது இவ் அரசாங்கத்தினது பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அறிக்கை விட்டுள்ளனர். ஆனால் அரசுடன் இது பற்றி பேசியுள்ளீர்களா என கேட்ட போது,

இவ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சருக்கும் எடுத்துக்கூறியுள்ளோம். இது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

நீங்கள் அரசாங்கத்தில் எதிர்கட்சித் தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் போன்ற உயர் பதவிகளை வகிக்கிறீர்கள் ஆனால் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் 3 நாள் ஆகிவிட்டது. கூட்டமைப்பினர் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரததமருக்கு இணைந்து ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா எனக் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது,

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். இன்னும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை இது தொடர்பில் அனைவரும் இணைந்து சந்திக்கவில்லை என தெரிவித்தார்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top