* அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுமுயற்சியில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் நிறுவப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான தடவாள பொருள்கள், மாதிரி செயற்கைக்கோள் மற்றும் அங்கு உள்ளவர்களுக்கான உணவு, உடைகள் உள்பட சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டு விண்வெளிக்கு செல்வதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

* சீனாவை பொறுத்தவரை மாசுக்கட்டுப்பாட்டு நிலை என்பது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு நீர், காற்று, மணல் போன்ற இயற்கைவளங்களை மாசுபடுத்துபவர்களிடம் இருந்து அதற்குரிய இழப்பீடு வசூலிக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நிறுவனங்கள், தனிநபர் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் பொருந்தும் இந்த சட்டம் தற்போது குறிப்பிட்ட சில மாகாணங்களில் அமல்படுத்தப்படும் எனவும், 2018-ல் தேசியமயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜப்பானில் முதல் முறையாக பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டில் அடுத்த நிதி ஆண்டுக்கு அதாவது 2016 ஏப்ரல் முதல் 2017 ஏப்ரல் வரையிலான ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ராணுவத்தின் பங்களிப்பிளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

* சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் தற்போது இங்கிலாந்தின் ராணுவப்படையும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஆனால் வான்வழி தாக்குதல்களால் மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடமுடியாது என்றும் சிரியா மற்றும் அரபு நாடுகளின் தரைப்படையும் களத்தில் இறங்கி செயல்படவேண்டும் எனவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஜான் கெர்ரீ தெரிவித்துள்ளார்.