Canada

”ஒமார் கார்டர்”; சிறுவர் போராளி, கைதி, மனிதன்

ஜூலை 27, 2002 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ”ஒமார் காடர்” நின்றிருந்த வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இது நிகழ்ந்து பதினைந்து ஆண்டுகள் முடிவடையும் தருணத்தில் அந்தச் செய்தியின் முக்கியத்துவம் கனடா தேசம் முழுவதும் வியாபித்து நிற்கிறது. ஒரு அமெரிக்கப் போர் வீரர் கொல்லப்பட்டு மற்றொரு அமெரிக்கப் போர்வீரர் அந்தச் சண்டைக்களத்தில் காயமுற்றிருக்கிறார். அந்த இடத்தில் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் பதினைந்து வயதுச் சிறுவர் போராளியான கனேடிய குடிமகன் ”ஒமார் காடர்” !

கைது செய்யப்பட்ட ”ஒமார் கார்டர்” கனடாவில் ”ஸ்காபுரோ சென்ரானறி” வைத்தியசாலையில் பிறந்தவர். கனடியக் குடிமகன்! சிறுவனாகக் கைது செய்யப்பட்ட அவர் நீண்ட காலம் தனிமைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் ஜெனீவாப் பிரகடனங்களுக்கு அமைய அவரது கைது, தடுப்புக்காவல், விசாரணை முறைகள், இராணுவ நீதிமன்றச் செயற்பாடுகள் கையாளப்படவில்லை. ஏன் கனடியச் சட்டங்கள் உட்பட ! ”ஓமார் கார்டர்” கனடியக் குடிமகன் என்பதால் அவற்றுக்கான பொறுப்புக் கூறலில் அமெரிக்க அரசினை விடக் கனடிய அரசுக்கு மிகப்பெரிய கடப்பாடு உண்டு என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.

பத்து வருடங்களுக்கு மோலாகச் சிறைகளில் துயரம் தோய்ந்த நீண்ட நாட்களை இழுத்தடித்த இந்த அவலம் முதலாம் உலக நாட்டுப் பிரஜையான சிறுவன் ”ஒமாருக்கு” நேர்ந்திருக்கின்றது. தனது பெற்றோர்களாலேயே ”ஒமார் கார்டர்” குழந்தைப் போராளியாகும் நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டிருப்பது இங்கு மிகுந்த முக்கியத்துவம் படைத்தததாக விளங்குகிறது. அதனால் அந்தச் சிறுவன் போரின் நடுவே தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலையும் நிகழ்ந்திருக்கிறது. சிறுவன் ”ஒமார்” தனது சொந்த உணர்வுநிலைக்கு அப்பால் பெற்றோரின் அழுத்தத்தினால், விருப்பத்தினால், அபிலாசைகளால் இத்தகைய இக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளான். ஆனால் கனடிய அரசோ தமது நாட்டின் மிகவும் உன்னதமான மனித உரிமைகளை மதிக்கும் கனடியச் சட்டங்களைக் கணக்கில் கொள்ளாது தனது சொந்தக் குடிமகனான அந்தச் சிறுவனைப் புறந்தள்ளியுள்ளது. பொருட்படுத்தாது விட்டுள்ளது.

2010 இல் ஒட்டாவில் அமைந்துள்ள கனடிய அதிஉச்ச நீதிமன்றம் ஏகமனதாக ”ஒமார் கார்டருக்கு” ஆதரவாகத் தீர்ப்பளித்திருக்கின்றது. அந்தத் தீர்ப்பில் கனடிய அரசும் கனடிய உளவுத்துறை அதிகாரிகளும் கனடிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கனடியக் குடியுரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட ”Charter of Rights and Freedom” உரிமைகளை மீறியுள்ளார்கள் என்பது தெட்டத் தெளிவாகச் சுட்டப்பட்டுள்ளது.

”ஒமார் கார்டர்” தூக்கமின்மை மூலம் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். நயவஞ்சகமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது சிறுவன் ”ஒமார் கார்டருக்கான” சட்ட ஆலோசகர் உடனிருக்கவில்லை. சட்ட ஆலோசனை பெறும் வசதிகள் அவருக்கு வழங்கப்படவில்லை. சிறு வயதினான ”ஒமார் கார்டர்” கனடியச் சட்டங்கள் முற்றாகப் புறக்ககணிக்கப்பட்ட நிலையில் கனடிய அதிகாரிகளினால் கொடூரம் வாய்ந்த ”குவாண்டனாம் பே” சிறையில் விசாரணை செய்யப்பட்டதை கனடிய அதிஉச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கின்றது. ”ஹார்ப்பரது”, பழமைவாத அரசு ஐந்து மில்லியன் டொலர்களை அந்த வழக்குகளுக்காகச் செலவழித்துத் தோல்வியடைந்திருந்தது. இந்தப் பிரச்சினை குறித்த கனடாவின் அலட்சிய மனோபாவம் இதன் மூலம் அம்பலப்பட்டுப் போயிருந்தமையை நாம் நோக்கலாம்.

கடந்த இருபது ஆண்டுகளாக சிறுவர் போராளிகளின் பாதுகாப்பிற்காக உலகளாவிய தர நிர்ணயங்கைள வென்றெடுக்கப் போராடிய, உழைத்த நாடு கனடா! உலகின் பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரமான யுத்தங்களில் சிறுவர் போராளிகள் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்து வந்த நாடு கனடா!

அவ்வாறு சிறுவர்களைப் போரில் நுழைக்கும் அமைப்புகளுக்கும், அரசுகளுக்கும் எதிராகத் தடைகளையும் சட்டங்களையும் கொணருவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்குள்ளாக நிறைய முன்மொழிவுகளையும், பேச்சுவார்த்தைகளையும், மாநாடுகளையும், கலந்துரையாடல்களையும் தீவிரமாக முன்னெடுத்த நாடு கனடா!
அத்தகைய சரித்திரப் பின்னணிகளைக் கொண்ட நாடான கனடா தனது நாட்டுப் பிரஜை ஒருவர் சிறுவர் போராளியாகப் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டு இராணுவத் தடுப்பு முகாம்களில் நீண்ட நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகையில் பாராமுகம் காட்டியது ஏன் ?அவர் முஸ்லீம் என்பதாலா…அல்லது நட்பு நாடான அமெரிக்காவோடு ஒத்துப்போக வேண்டிய கட்டாயத்தின் காரணமா ? அல்லது வெளிப்படையாகவே தன்னுடைய சொந்த நாட்டுச் சட்டங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை……. இந்த வகையான யுத்தங்களின் போது என்பதாலா ?

இன்று கனடிய அரசாங்கம் பதினைந்து வருட காலத்தின் பின் தனது மன்னிப்பினையும் நட்டஈட்டையும் (பத்தரை மில்லியன் கனடிய டொலர்கள்) ”ஒமார் கார்டருக்கு” வழங்கியுள்ளது. ஏற்கனவே தங்களது உயர் நீதிமன்ற வெற்றியின் பின்னர் 2013இல் இருபது மில்லியன்கள் நட்டஈட்டினைக் கனடிய அரசிடம் கேட்டு ”ஒமார் கார்டரின்” வழக்கறிஞர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் எம்மால் எவ்வாறு ”ஒமார் கார்டருக்கு” வழங்கப்பட்ட மன்னிப்பு மற்றும் இழப்பீட்டுக்கு எப்படி எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்? ”ஒமார் கார்டரது” மிகவும் அடிப்படையான உரிமைகள் சிலவற்றைக் கனடிய அரசு மீறியுள்ளதாகவும் அதற்கான இழப்பீட்டை அவர் கோர முடியும் என்று கனடாவின் அதிஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் எந்த முகத்தோடு இத்தகைய எதிர்ப்புக் கேள்விகளைக் கேட்க முடியும் ?

கனடியர்களில் 71 சதவீதமானவர்கள் ”ஒமார் கார்டர்” சிறுவர் போராளி என்பதை ஏற்றுக்கொள்ளுவதாகக் கருத்துக்கணிப்பொன்று சொல்லியிருந்தது. அது சரியெனில் அந்தச் சிறுவர் போராளியை அந்தக் கனடியக் குடிமகனை இஸ்லாமியன் என்பதற்காகப் பழி வாங்கவும் குரோத மனப்பான்மையுடனும் நடத்துதல் ஏற்புடையதா ?

இதுவரை கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 487 பேர் வரை பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் யாருமே முஸ்லீம் குடிவரவாளர்களால் கொல்லப்படவில்லை. நடைபெற்ற 487 கொலைகளில் இரண்டு கொலைகள் மாத்திரமே முஸ்லீம் மதத்தோடு சம்மந்தப்பட்டது. அதுவும் கூட இங்கு பிறந்து வளர்ந்து மதம் மாறிய வெள்ளையின வாலிபர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே பிரதான அரசியல் கட்சியொன்று தனது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்துகிறது. அதற்கு சில வலதுசாரி ஊடகங்கள் ஒத்துழைக்கினறன. அதில் கனடியக் குடிமக்கள் இஸ்லாமிய மத விரோத மனப்பான்மை என்ற உளவியல் சிக்கலில் மாட்டிக்கொண்டு பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டியதொன்று. நாம் அனைவரும் மத அடிப்படை வாதம் பயங்கரவாதமாகத் தோற்றம் பெறுவதையும், செயற்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் தாம் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.

ஆனால் ”ஓமார் கார்டர்” என்ற சிறுவர் போராளி உருவான விதம் அவனது பிரக்ஞையின் பாற்பட்டதாக அல்லாததாக அவனது பெற்றோரின் தான்தோன்றித்தனத்தால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவன் சுடப்பட்டுப் படுகாயங்களோடு சிறு வயதுக் கைதியாகப் பிடிக்கப்பட்டு அனைத்துலக மற்றும் கனடிய சட்ட வரையறைகளுக்கு உட்படுத்தப்படாமல் நீண்டகாலம் சிறை சித்திரவதைகளை அனுபவித்துள்ளான் என்பதை உணருதல் வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறைப்பட்டிருந்த அந்த ”ஒமார் கார்டர்” இன்று மனிதனாகக் கனடாவிலே சிறையிலிருந்து விடுபட்டு வெளியே வந்திருக்கின்றான். அவனது சுதந்திரத்தை, அடிப்படை உரிமைகளை மதிப்பதும் கனடாவிலே அவனை மனிதனாக வாழ அவனை அனுமதிப்பதும் கனடியப் பெருந்தேசத்தினது கடமையாகிறது!

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top