Jaffna

தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்ளதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு ஒருங்கிணைப்புக் குழு கொழும்பில் கூடி தீர்மானம்.

.
தேர்தலை ஒன்றாகவே எதிர்கொள்ளதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு ஒருங்கிணைப்புக் குழு கொழும்பில் கூடி தீர்மானம்
“எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, தமிழ்க் கூட்டமைப்பாகவே ஒரே பட்டியலிலேயே எதிர்கொள்ள வேண்டும்.”

இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட கூட்டமைப்பின் பெரும்பாலான பங்காளிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக இந்தக் கருத்தை வலியுறுத்தினர்.

அந்தக் கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். பிரதிநிதியும் பிரசன்னமாகியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா எம்.பி., கட்சிச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், கட்சிப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி., கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரத்தினம் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன் எம்.பியும், ஆர்.ஆரும், ரெலோ சார்பில் கட்சிச் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் பங்குபற்றினர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து விசனமும், குறையும் கூறி நீண்ட ஓர் உரையை ஆற்றினார்.
அவரைப் போலவே, மக்களின் உடனடிப் பிரச்சினை விவகாரத்தில் எந்த நடவடிக்கைகளும் உருப்படியாக முன்னெடுக்கப்படவில்லை என்பதைக் கூட்டத்தில் கலந்துகொண்ட எல்லாத் தலைவர்களும் சுட்டிக்காட்டினர்.

தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அரசமைப்பு உருவாக்க முயற்சிகளிலிருந்து கூட்டமைப்பு பின்வாங்கிவிடக்கூடாது என்று பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.

அமைதி முயற்சிகளை சமாதானத் தீர்வுக்கு இடமளிக்கும் அரசமைப்பு உருவாக்க நடவடிக்களை முறித்துக்கொண்டவர்கள் தமிழர்கள் என்ற அபவாதம் வந்துவிடாமல் செயற்படுவது முக்கியம் என்பதை ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா பக்குவமாக எடுத்துரைத்தார். அதனை சித்தார்த்தன் வழிமொழிந்தார்.
இந்தக் கூட்டம் எதிர்பார்த்ததைவிட மிகுந்த இணக்கத்துடனும் புரிந்துணர்வுடனும் நடைபெற்றதாக அதில் பங்குபற்றிய ஒரு தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட எல்லாத் தலைவர்களும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னைய தேர்தல்களைப்போல கூட்டமைப்பாக ஒன்றாக ஒரே பட்டியலில் எதிர்கொள்ளவேண்டும் என வற்புறுத்தினர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அதை மௌனமாக செவிமடுத்தார். அதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் அறியவந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top