Jaffna

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவியரீதியில் ஒருங்கிணைந்த 1705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த டிசெம்பர் 8ம் நாளன்று ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையின் 18, 19, 1 ஆகிய உறுப்புகளில் உறுதியளிக்கப்பெற்ற பேச்சுரிமையையும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மீறுவதாகும் என்று இம்முறையீடு எடுத்துரைக்கின்றது.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க், இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் கே. பி. சிவசுப்ரமணியம், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இம்முறையீட்டைத் தாக்கல் செய்தனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இந்தியா (தமிழ்நாடு, மகாராட்டிரம், கர்நாடகம், புது தில்லி) தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர் மன்றத் தலைவர்கள், சட்டப் பேராசிரியர்கள், ஒய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட உலகளாவிய சட்டத்தரணிகள் இம்முறையீட்டுக்குச் சட்டப் பிரதித்துவம் வழங்கியுள்ளனர்.

இந்தச் சட்டப் பிரதிநிதித்துவம் சிறிலங்காவில் புகழ் பெற்ற நிறைமன்ற விசாரணையின் போது, நினைவில் வாழும் பெருமக்கள் சா.ஜே,வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம், எம். திருச்செல்வம் உள்ளிட்ட 67 சட்டத்தரணிகள் வழங்கிய சட்டப் பிரதிநிதித்துவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அந்த விசாரணையில்தான் சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தமிழர்கள் மீது இறைமை கிடையாது என்று தமிழ்த் தலைவர்கள் வாதுரைத்தார்கள்.

அனைத்துலக வழக்காற்றுச் சட்டமாக மதிக்கப்படும் ஐநா பொதுப் பேரவைத் தீர்மானம் எண் 2625 (1970) என்பதற்கிணங்க சுதந்திர அரசு என்ற வடிவில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த இயலும் என்றாலும், சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் இதனைக் குற்றச் செயலாக்குவதாக உள்ளது.

டான் சந்திரசோமா – எதிர் – மாவை எஸ். சேனாதிராஜா, செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சி (உ.நீ. தனி ஜளுஊ ளுPடுஸ 03ஃ2014) என்ற வழக்கில் 2017 ஏப்ரல் 8ஆம் நாள் வெளியிடப்பட்ட சிறிலங்க உச்ச நீதிமன்ற முடிவும் இப்போதைய முறையீட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதும் கூட அரசமைப்புச் சட்ட ஆறாம் திருத்தத்தின் உறுப்பு 4 ஜ157யு (4)ஸ, உறுப்பு 5 ஜ157யு (5)ஸ ஆகியவற்றின் வழிவகைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பதை மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காட்டுவதாக இம்முறையீடு வாதுரைக்கிறது.

சிறிலங்க அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதையே குற்றச் செயலாக்குகிறது என்றும், இது குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பெறும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அளவில் நன்கறியப்பட்ட பல வழக்குகளையும் எடுத்துக்காட்டி வாதுரைத்து வருகிறது.

மேலும், புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’, ‘ஐக்கியராஜ்யா’, ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்லாட்சியையும், அந்த அறிக்கையின் உறுப்பு 2.2.இல் காணப்படும் பிரிவினைக்கு எதிரான காப்புக் கூறுகளையும் சட்டத் தரணிகளின் முறையீடு எடுத்துக்காட்டுகிறது.

சான்றாகச் சில வழக்குகள்:

1) ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒக்சுவோக்லு – எதிர் – துருக்கி, அர்ஸ்லான் – எதிர் – துருக்கி 1999 யூலை 8 ஆகிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளில் கூறியுள்ள படி, பிரிவினைப் பரப்புரைக்கான குற்றத் தீர்ப்புகள் ஐரோப்பிய மனிதவுரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவன ஆகும்.

2) அந்நீதிமன்றம் இர்தோக்டு மற்றும் இன்செவ் – எதிர் – துருக்கி என்ற வழக்கில் (இதுவும் 1999 யூலை 8) வழங்கிய தீர்ப்பின் படியும் நாட்டின் பிரிக்கவொண்ணாமைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதற்கான குற்றத் தீர்ப்புகள் ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவன ஆகும்.

3) அந்நீதிமன்றம் எகின் சங்கம் – எதிர் – பிரான்சு வழக்கில் 2001 யூலை 17ஆம் நாள் வழங்கிய தீர்ப்பின் படி, பாஸ்க் பிரிவினைக் கொள்கையை வலிந்துரைக்கும் நூலொன்றைத் தடை செய்வது ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவது ஆகும்.

4) அந்நீதிமன்றம் இசாக்திபே – எதிர் – துருக்கி வழக்கில் 2008 அக்டோபர் 21ஆம் நாள் வழங்கிய தீர்ப்பின் படி, பிரிவினைக் கருத்துப் பரப்பலுக்குக் குற்றத் தீர்ப்பில்லாத குற்றச்சாட்டு என்பது ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவதாகும்.

முறையீடு தாக்கலானவுடனே, ஐநா மனித உரிமைக் குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கும்.

இந்த முன்முயற்சி சனநாயகத்தை வலுப்பெறச் செய்யும் உலகுதழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக மதிக்கப்படுகிறது.

சிறிலங்காவுக்குப் புதிய அரசமைப்புச் சட்டம் வரைதல்:

சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்கள் புதிய அரசமைப்பை வரையவும் பொது வாக்கெடுப்பு கோரவும் செய்து வரும் ஏமாற்று முயற்சியைக் கருதிப் பார்க்கையில், ஐநாவுக்கான இம்முறையீடு காலத்தே செய்யப்படுவதாகும். சிறிலங்க அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் தமிழர்கள் தமது அரசியல் வேணவாக்களை விரும்பியவாறு வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது.

பொதுவாக்கெடுப்பு நடத்துவதானால், தங்குதடையற்ற திறந்த அரசியல் வெளியில் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் அடங்கிய தமிழ்த் தேசத்தினிடையே நடத்த வேண்டும்.

இது பற்றிய மேலதிக விபர்களுக்கு : [email protected]

பின்னணி:

உண்மையில் ஆறாம் திருத்தத்தின் தொடக்கப் புள்ளி என்பது ஒன்றுபட்ட தமிழ்த் தலைமையின் நன்கறியப்பட்ட 1976 வட்டுக்கோட்டை தீர்மானம்தான். அது (முதல் முறையாக) இலங்கைத் தீவில் இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழ அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுத்தது.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே வட்டுக்கோட்டைத் தீர்மானம் பறைசாற்றப்பட்டது.

அடுத்து 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்காலத்திய தமிழ்த் தலைமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்களிடம் முன்வைத்துக் கட்டளை கேட்டது. வடக்குகிழக்கில் தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அமோக ஆதரவு தெரிவித்து, ஓங்கிய கட்டளை வழங்கினார்கள்.

அந்த 1977 தேர்தலுக்குப் பிறகான எல்லாத் தேர்தல்களும் ஆறாம் திருத்தம் திணித்த வரையறைகளுக்கு உட்பட்டே நடைபெற்றன. கடைசியாகத் திறந்த அரசியல் வெளியில் நடைபெற்ற தேர்தலாகிய 1977 பொதுத் தேர்தலில் மக்கள் தந்ததுதான் செல்லத்தக்க ஒரே கட்டளையாக இருந்து வருகிறது என்பதே இதன் பொருள்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top