India

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார், யார்?

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது நேரில் பார்த்தவர்கள் யார், யார்? என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஜெயலலிதா மரணம் அடைந்தது பல்வேறு தரப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்க்க தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், அவர்கள் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஒரு புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. இதனால், ஜெயலலிதா மரணத்தில் தற்போது வரை பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. இதனால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தினர்.

இதையேற்று, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவில் இடம்பெற்ற தர்மராஜன், முத்துசெல்வன், கலா, பாலாஜி மற்றும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவ கல்லூரி டீன் நாராயணபாபு, முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, முன்னாள் எம்எம்சி டீன் முரளிதரன் ஆகியோரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். தொடர்ந்து, முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டோரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது, டாக்டர்கள் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும் அப்போலோ மருத்துவமனையில் தனி அறையில் அமர வைக்கப்பட்டதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை தரவில்லை என்றும் நீதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால், அரசு டாக்டர் பாலாஜி மட்டும் ஜெயலலிதாவை பார்த்ததாக தெரிவித்தார். அவரை போன்று, விசாரணை ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில் ஜெயலலிதாவை யார், யார் பார்த்தனர் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: ெஜயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது சசிகலா மட்டுமே இருந்ததாக விசாரணையின் போது பலர் தெரிவித்தனர்.

அவர்தான் தினமும் பார்த்தார் என்று அவர்கள் கூறினர். ஆனால், அவரை தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், டாக்டர் பாலாஜி ஆகியோர் அப்போலோ மருத்துவமனையில் நேரில் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், தீபக் மட்டும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட முதல் வாரத்திலும் பின்னர் ஜெயலலிதா மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4ம் தேதியும் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top