Business

கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி!

கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த விமானத்தில் 104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர்.
கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு குறித்த விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கியூபாவின் அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானா, பல பழைய விமானங்களை சமீபத்தில் இருந்து தான் பயன்படுத்துவதை நிறுத்தியது. விபத்துக்குள்ளான இந்த விமானம் சமீபத்தில் தான் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விபத்தின் போது விமானமானது, விமானநிலையத்திற்கு அருகில் உள்ள விவசாய பகுதியில் விழுந்துள்ளது. அப்போது மரங்கள் மீது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதால், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடல்கள் ஆங்காங்கே மரங்களில் சிதறிக்கிடந்ததாகவும், அதுமட்டுமின்றி விமானத்தின் பாகங்கள் தற்போது வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாகவும், அதை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து எரியும் விமானத்தின் பாகங்கள் மற்றும் மரங்களில் சிதறிக் கிடந்த பயணிகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கியுள்ளவர்களில் பலரின் உடல்கள் தீயில் கருகியுள்ளது.

விமான விபத்திற்கான காரணம் குறித்து சரியாக தெரியவில்லை எனவும், அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2010-ஆம் ஆண்டு மத்திய கியூபாவில் நடந்த விமான விபத்தில் 68 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top
Skip to toolbar