அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப்பாய்ந்தன 8 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு

உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இந்த ஜல்லிக்கட்டை காண நேற்று முன்தினம் முதலே மக்கள் கூட்டம் திரண்டுவந்தது. அலங்காநல்லூர் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு கோட்டை முனியாண்டி சாமி திடலில் நடந்தது.
ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தைச் சுற்றிலும் திரண்டு இருந்தனர். திடலுக்கு உள்ளேயும், வெளியேயும் காலரிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர், அவனியாபுரம் சுற்றுப்பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள் வந்தன. அவற்றை கால்நடை டாக்டர்கள் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள். தகுதி உள்ள காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் உடல் பரிசோதனை செய்தனர். வந்திருந்த 890 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 193 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 697 வீரர்கள் ஒரு ரவுண்டுக்கு 50 பேர் வீதம் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 8 மணிக்கு பச்சைக் கொடி காட்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தனர். முதலாவதாக முனியாண்டி சாமி கோவில் மாடு அவிழ்த்துவிடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை.
பின்னர் முரட்டுக்காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் வீரர்களிடமிருந்து நழுவி ஓடிவிட்டன. பல காளைகளை இளைஞர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். பல காளைகள் ஆக்ரோஷமாக துள்ளிக்குதித்து பிடிபடாமல் ஓடின. சீறி வந்த சில காளைகளின் திமிலை விடாப்பிடியாக பிடித்து ஓடி இளைஞர்கள் பரிசுகளை தட்டிச்சென்றனர்.
மாடு பிடிபட்டால் அதை பிடித்த வீரருக்கும், யாரிடமும் சிக்காமல் துள்ளிக்குதித்து ஓடிவிட்டால் அந்த காளையின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கக்காசு, வெள்ளிக்காசு, செல்போன், கட்டில், பீரோ, விமான டிக்கெட், மின்விசிறி, மிக்சி, சைக்கிள் உள்பட பல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. அவ்வப்போது ரொக்கப்பரிசும் வழங்கினார்கள்.
ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு விழா முடியும் தருவாயில் இன்னும் நிறைய காளைகள் உள்ளதால் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கலெக்டர் ஏற்றார்.
இதனால் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. 630 காளைகள் வந்ததில் 27 தகுதிநீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள 603-ல் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடு முட்டித் தள்ளியதில் 40 இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 7 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அலங்காநல்லூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை காண இங்கிலாந்து, மலேசியா, பிரான்சு, இத்தாலி, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அவர்கள் தனிமேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஒருசில வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் வந்து இருந்தனர்.
சிறந்த வீரராக 8 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை அடுத்த பெரிய ஊர்சேரியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரும், சிறந்த காளை உரிமையாளராக மிளகரணை சந்தோஷும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
9 மாடுகள் சிறந்தவையாகவும், மதுரை வீரபாண்டியை சேர்ந்த போலீஸ்காரர் வினோத் உள்பட 5 பேர் சிறந்த வீரர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டன.