அ.தி.மு.க.வில் இருந்து யாரும் பிரிந்து செல்ல மாட்டார்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தொண்டர்கள் கையில் தான் கட்சி உள்ளது என்றும், அ.தி.மு.க.வில் இருந்து யாரும் பிரிந்து செல்ல மாட்டார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-
முதலீட்டாளர்கள் மாநாடு
கேள்வி:- உலக தமிழ் மாநாடு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதா?
பதில்:- அரசின் சார்பாக முறையான அறிவிப்பு வெளிவரும்.
கேள்வி:- உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கான முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா?
பதில்:- இந்த ஆண்டு இறுதிக்குள் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆரம்ப கட்ட பணியாக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த பணி துரிதப்படுத்தப்படும்.
ஜல்லிக்கட்டு
கேள்வி:- ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து உள்ளர்கள். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவு தருவார்களா?
பதில்:- ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு பல்வேறு பிரச்சினைகள் வந்தபோது சட்டப்படியாக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோர்ட்டு தீர்ப்பு மூலமாக தான் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு இருக்கிறது.
கேள்வி:- தமிழக அரசின் விருதுகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட நபர்கள் குறித்து பல விமர்சனங்கள் வருகிறதே?
பதில்:- விருதுக்கு தகுதியானவர்கள் தானா? என்று பல்வேறு பிரிவுகளில் மதிப்பெண்கள் போடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.
கேள்வி:- டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்குவது பற்றி உங்கள் கருத்து?
பதில்:- அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.
தொண்டர்கள் கையில் கட்சி
கேள்வி:- தனிக்கட்சி தொடங்கினால் அ.தி.மு.க. தொண்டர்கள் அங்கு செல்வார்களா?
பதில்:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக தான் தொடங்கி வளர்த்தார்கள். தொண்டர்கள் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருப்பவர்கள். அ.தி.மு.க. இப்போது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது. எந்த ஒரு தொண்டனும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செல்ல மாட்டார்கள். அ.தி.மு.க.வில் தான் இருப்பார்கள்.
கேள்வி:- மதுசூதனன் கடிதம் எழுதியது பற்றி?
பதில்:- மதுசூதனன் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. முறையான பதிலும் தந்து இருக்கிறார்.
கேள்வி:- முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் வெளிநாட்டில் சொத்துகளை வாங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதே?
பதில்:- ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.