ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானின் நங்கார்கர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. #Afghanistan
ஆப்கானிஸ்தானின் நங்கார்கர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று ஒரு இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஊர்வலத்திற்குள் புகுந்த ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தாலிபன்கள் அல்லது ஐ.எஸ். அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தாலிபன்கள் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு முதல் 9 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது