ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை காபுலின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் போதைப்பொருள் கும்பலை பிடிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது தற்கொலைப்படை தாக்குதல் என ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர் ராணுவ வீரர்களை போல் உடையணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 11 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.