News

ஆப்கானிஸ்தான் ராணுவ கல்லூரி மீது தாக்குதல்: 5 வீரர்கள் பலி – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் மார்‌ஷல் யாகிம் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியாகும்.

இந்த பாதுகாப்பு அரணையும் மீறி இன்று அதிகாலை 5 மணியளவில் அங்கு தீவிரவாதிகள் சிலர் உள்ளே புகுந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். கையெறிகுண்டுகளும் வீசப்பட்டன.

அதை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது ராணுவம் திருப்பி சுட்டது. இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. கல்லூரியை சுற்றியுள்ள ரோடுகள் அனைத்தும் மூடப்பட்டன. அப்பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்றது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். 10 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top