News

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை:

ஆட்கடத்தல்காரர்களின் வார்த்தைகளை நம்பி ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு ஆஸ்திரேலிய உயர் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைத் தொடர்பாக விவரித்துள்ள இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ப்ரைஸ் ஹட்ஷெசன், “கடந்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய கடலுக்குள் நுழைந்த இலங்கை ஆட்கடத்தல் படகுகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் பயணித்த அனைவரும் இலங்கைக்கே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.”

“கடந்த காலங்களில் சட்டவிரோதமாக வந்தவர்கள், ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கலாம். ஆனால் இப்போது ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு செயல்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய ஆஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயல்பட்டு வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார் ஆஸ்திரேலிய தூதர்.

2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் முடிவிற்கு வந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் உயிருக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையத் தொடங்கினர். போரில் நேரடி பாதிப்பை எதிர்கொள்ளாத தென் இலங்கை சிங்களவர்கள் சிலரும் இதனை முயற்சித்தனர். இன்றும் சிங்களவர்களிடையே படகு வழியாக ஆஸ்திரேலியா செல்லும் முயற்சி காணப்படுகின்றது. படகு வழி தஞ்சக்கோரிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக 2013 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அரசு கடுமையான எல்லையோரக் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த டிசம்பர் 2017 யில் ஆஸ்திரேலிய எல்லையோர பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட படகிலிருந்து 29 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதே மாதத்தில், ஆஸ்திரேலியாவை நோக்கிய இரண்டு சட்டவிரோத முயற்சிகள் இலங்கையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இவ்வாறான நிலையில், சிங்களவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட இருத்தரப்பையும் பொருளாதார அகதிகளாகவே ஆஸ்திரேலியா முத்திரைக் குத்துகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top