இந்தியாவடமாநிலங்களில் குளிருக்கு 92 பேர் பலி

புதுடெல்லி : வடமாநிலங்களில் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. மலைப்பிரதேச மாநிலங்களில் 2 டிகிரி செல்சியசும், தரைப்பகுதிகளில் 5 டிகிரி செல்சியசும் குளிர் நிலவுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்கு இந்த குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்படுகிறது. தாமதாக வருவது சாதாரண நிகழ்ச்சியாக உள்ளது. இது தவிர விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மோசமான குளிரின் காரணமாக, தங்குவதற்கு வீடுகள் இன்றி சாலை ஓரங்களில் தங்கி இருக்கும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குளிரின் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். கடும் குளிர் தொடர்ந்து நிலவி வருவதனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மரணங்களைத் தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் அரசு சார்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தீ மூட்டி குளிர் காய விறகுகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.