India

இந்தியா69வது குடியரசு தின விழா கோலாகலம் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி ஏற்றினார்

புதுடெல்லி: நாட்டின் 69வது குடியரசு தினவிழா டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாட்டின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் கலாசார கலை நிகழ்ச்சிகளை கண்டு வியந்தனர். நாட்டின் 69வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் நேற்று காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாநில தலைநகரங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகேயுள்ள ராஜபாதையில் குடியரசு தினவிழா நேற்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் பிரதமர் மோடி, முப்படை தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஏதாவது ஒரு நாட்டின் தலைவர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை இந்தியா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாட்டு தலைவர்களும் டெல்லி வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தாய்லாந்து பிரதமர் சான் ஓ சா, இந்தோனேஷியா அதிபர் ஜோகோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல், லாவோஸ் பிரதமர் தோங்லூன், மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, கம்போடிய பிரதமர் ஹன் சென், மலேசியா பிரதமர் முகமது நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ, வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசு தினவிழாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது இதுவே முதல் முறை. இவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக வரவேற்று, சிறப்பு மேடையில் அமரவைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும், பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை, ராஷ்டிரபதி பவனில் இருந்து குதிரைப்படை வீரர்கள், விழா மேடைக்கு அழைத்து வந்தனர். அவரை பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வரவேற்றனர். சிறப்பு மேடையில், அமைக்கப்பட்டிருந்த தேசியக் கொடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று காலை 10 மணியளவில் ஏற்றினார். அப்போது ராணுவ வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். பீரங்கி குழுவினர் 21 குண்டுகளை முழங்கினர்.

ஜனாதிபதியாக பதவியேற்றபின், ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்ளும் முதல் குடியரசு தினவிழா நிகழ்ச்சி இது. தேசியக் கொடியை ஏற்றியபின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. ராணுவத்தின் பல பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் மிடுக்கான சீருடையில் அணிவகுத்து வந்தனர். ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் உட்பட பலவகை ஏவுகணைகள், ரேடார் கருவிகள் பொருத்தப்பட்ட ராணுவ வாகனங்களும் அணி வகுத்து வந்தன. இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு இருந்தது. இதை ஆசியான் நாடுகளின் தலைவர்கள் பிரமிப்புடன் பார்வையிட்டனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. இதையும் சிறப்பு விருந்தினர்கள் ரசித்து தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. எல்லை பாதுகாப்பு படையில் முதன் முதலாக சேர்க்கப்பட்ட பெண்கள் பைக் குழுவினரும் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு பார்வையாளர்களை அசத்தினர்.

விமானப்படையின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜாக்குவார், தேஜஸ், மிக்-29, சி-17 குளோப் மாஸ்டர், சுகாய் போர் விமானங்கள் ராஜபாதைக்கு மேல் அணி வகுத்து சென்றன. சுகோய் ரக போர் விமானம் 900 கி.மீ வேகத்தில் பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்டு பார்வையாளர்களை அசத்தியது. இந்தியா கேட் முதல் செங்கோட்டை வரை 8. கிமீ தூரத்துக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த பிரமாண்ட அணிவகுப்பை சிறப்பு விருந்தினர்களும், பார்வையாளர்களும் வெகுவாக ரசித்தனர். அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் தேசிய கீதத்துடன் குடியரசு தினவிழா நிகழ்ச்சி முடிவடைந்தது. அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விஐபி.க்கள் புறப்பட்டு சென்றனர். அதன்பின் பிரதமர் மோடி ராஜபாதையில் பார்வையாளர்கள் பகுதியை நோக்கி வெகுதூரம் நடந்து சென்று கையசைத்தபடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது ‘மோடி, மோடி’ என பார்வையாளர்கள் கோஷம் எழுப்பினர்.

நிரம்பி வழிந்த கூட்டம்: குடியரசு தின விழா அணிவகுப்பை கண்டு ரசிக்க டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர மக்கள் நேற்று அதிகாலை முதலே வரத்தொடங்கி விட்டனர். பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் முதல் மூத்த குடிமகன்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அதிகாலை முதலே கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காக பார்வையாளர்கள் பகுதிக்கு வந்தனர். இதனால் ராஜபாதை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 60 ஆயிரம் வீரர்கள்: குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 60 ஆயிரம் வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் வான்வெளி தாக்குதல் நடத்தினாலும், அதையும் எதிர்கொள்ளும் அளவுக்கு விமானப்படை தயார் நிலையில் இருந்தது. டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

* ஜனாதிபதியாக பதவியேற்றபின் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற முதல் குடியரசு தினவிழா இது.
* முதல் முறையாக 10 நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
* எல்லை பாதுகாப்பு படையில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட பெண்கள் பைக் குழுவினர் சாகசத்தில் ஈடுபட்டனர்.

கண் கலங்கினார் ஜனாதிபதி
ராணுவத்தில் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது, வீரமரணம் அடைந்த விமானப்படை கமாண்டோ ஜோதி பிரகாஷ் நிரலாவுக்கு வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பந்திப்போராவில் உள்ள ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் கடந்தாண்டு நவம்பர் 18ல் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று இவர் வீர மரணம் அடைந்தார். இந்த விருதை வழங்குவதற்காக நிரலாவின் மனைவி சுஷ்மானந்த் மற்றும் தாயார் மால்தி தேவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மிகவும் சோகத்துடன் அவர்கள் விழா மேடையில் ஜனாதிபதி ராம்நாத் முன் நின்றனர். அவர்களுக்கு அசோக சக்ரா விருதை வழங்கியபோது கண்கலங்கினார் ஜனாதிபதி.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top