News

இன்று முதல் யாழில் பலத்த பாதுகாப்பு! பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை களத்தில்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடையும் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் தேர்தலை நடாத்தும் நோக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் சகல விடயங்களையும் பூர்த்தியாகும் வரையில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசியல் என்ற பெயரில் நாட்டில் குற்றவாளிகள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை தடுக்க பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமுல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தேர்தல் என்ற பெயரில் வாள் வெட்டுக் குழுக்கள் மீளவும் தலைதூக்கக் கூடும் என்பதனால் அந்த மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் அதிகளவில் செயற்படும் தென் மாகாணத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென்மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகள், திடீர் வீதித் தடைகள், சிவில் ஆடைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி சில தினங்கள் வரையில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top