ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் தவறுதலாக குண்டுவீச்சு: போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் பலி

ஈராக்கில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்திய போது தவறுதலாக போலீசாரின் பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பில் விழுந்து 8 போலீஸ்காரர்கள் பலியாயினர்.
ஈராக்கில் மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்தன. அவற்றை அமெரிக்க ராணுவத்தின் துணையுடன் ஈராக் ராணுவம் கடுமையாக போராடி மீட்டது.
அதையடுத்து அங்கு மொத்தமாக கூடியிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிரிந்து பல இடங்களில் பரவலாக தங்கியுள்ளனர். அவர்களின் இருப்பிடங்களை கண்டறிந்து குண்டு வீசி அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கு ஈராக்கில் அல்-பக்தாதி நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று குண்டு வீச்சு நடத்தின.
ஆனால் குண்டுகள் தவறுதலாக யுப்ரேட்ஸ் நகர் பகுதியிலும் போலீசாரின் பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பில் விழுந்து வெடித்தது.
அதில் 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் பலியாகினர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். 20 பேர் காயம் அடைந்தனர். குண்டு வீச்சில் ஏராளமான வாகனங்கள் நொறுங்கி அழிந்தன.
இச்சம்பவம் ஈராக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.