உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குவேன்

ஜனாதிபதி பதவிக்காலத்தை வகிப்பதற்கு தனக்கு முடியுமான கால எல்லை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கும் எந்தத் தீர்ப்புக்கும் தலைவணங்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இது தொடர்பில் எவரும் கலவரமடையத் தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நான் மிக முக்கியமானதொரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அதாவது எனது பதவிக்காலத்தை நாளையல்ல. இன்று வேண்டுமானாலும் கைவிட்டுவிட்டு ஒதுங்கிவிட தயாராக உள்ளேன். இப்பதவியில் நான் சதாகாலமும் இருக்க வேண்டும் என்று வரவில்லை. உயர்ந்த மனிதப் பண்புகளுடன் கூடிய, நாடொன்றை உருவாக்கும் கனவுடனேயே நான் இந்தப் பொறுப்புக்கு வந்தேன். அதற்கு எத்தகைய தடை ஏற்பட்டாலும் அதனை சவாலாக நான் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களது வெற்றியை உறுதிசெய்யும் கூட்டம் நேற்று (12)அக்குரஸ்ஸையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று எமது நாட்டின் ஊடகங்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் எனக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமான கால எல்லை தொடர்பில் கதைத்து வருகிறார்கள். எனது பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெற முடிவுசெய்தேன். அதனைத் தொடர்ந்தே பலர் இவ் விடயம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்கள்.
எனக்கு இந்நாட்டினதும், நாட்டு மக்களினதும் வாழ்வை மிகவும் சுபீட்சமானதாக்க வேண்டிய தேவையுள்ளது. என்னிடம் 35 வருட கால கனவொன்றிருந்தது. அக்கனவை நான் அண்மையில் வெற்றிகொண்டேன். அதுவே மொரகஹகந்த – களுகங்கை திட்டம். பெரியதொரு நீர்த்தேக்கத்தை நிர்மாணித்து விவசாயிகளிடம் ஒப்படைக்க முடிந்தது. பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியிலேயே அத்திட்டத்தை நிறைவுசெய்ய முடிந்தது.
ஊழல் புரியும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளின் காரணமாகவே எமது நாட்டு மக்களுக்கு உன்னதமான அரசியல், கலாசார, பொருளாதார சுதந்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அத்தகைய நபர்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் தற்பொழுது அதிகம் அறிந்துவைத்துள்ளனர்.
நான் ஒருபோதும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டு சாட்சியாளர்களை காப்பாற்ற உதவி செய்ய மாட்டேன். அதுபோன்று கடந்த மூன்று ஆண்டு காலத்தில் என்னால் முடிந்தளவு நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்துள்ளேன்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முதன்மையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி மிகவும் தெளிவானது.
எமது நாட்டை உலகில் முன்னேற்றகரமான நாடாக மாற்றுவதற்கு சகலரும் ஒன்றுபடுவோம் என்றார்.இக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாத்தறை மாவட்ட சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.