News

உடனே முடிவெடுங்கள்! – முதலமைச்சருக்கு சத்தியலிங்கம் அவசர கடிதம்

வவுனியா பேருந்து நிலைய சர்ச்சையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுத்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ,சத்தியலிங்கம் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பழைய பேருந்து நிலையத்தை உள்ளூர் சேவைக்கான நிலையமாக மாற்றுவதுடன், புதிய மத்திய பேருந்து நிலையத்தை வெளி மாவட்டம் மற்றும் மாகாணங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் பொருட்டு பயன்படுத்துவதற்கு அனைவரினதும் சம்மதம் பெறப்பட்டிருந்தது.

ஆனாலும், தாங்கள் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவான பழைய பேருந்து நிலையத்தை மூடும் செயற்பாடானது எமது மாவட்டத்தில் ஒரு பதற்றமான நிலைமையை தோற்றுவித்துள்ளதுடன், போக்குவரத்து சேவைகளில் பாரிய பிரச்சினையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒட்டுமொத்த மாவட்ட மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ள விடயம். அத்துடன் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளமையினால், அங்குள்ள 130இற்கு மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்கள் செயலிழந்துள்ளதுடன், அதில் வேலைசெய்யும் 600இற்கு மேற்பட்ட வேலையாட்களின் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது.

குறிப்பாக இந்த வருடம் பிறந்த முதல் நாளிலிருந்து இந்த பிரச்சினை உருவெடுத்துள்ளமை பொதுமக்கள் மத்தியில் ஒருவிதமான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இது தொடர்பில் ஏற்கனவே மூன்று தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, தனியார், அரச போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் அவசரமானதும், அவசியமானதுமான சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் சாதகமான விதத்தில் பதில் வழங்க வேண்டும் என்றும் குறித்த கடிதத்தில் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top