கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் ரயில்: ரத்தக்காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதி

அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பு வேலியில் மோதியதால் பயணிகள் பலர் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடமேற்கு சிட்னியின் ரிச்மாண்ட் நகர் ரயில் நிலையத்திற்கு காலை 10 மணியளவில் வந்த பயணிகள் ரயில் ஒன்று பிரேக் பிடிக்காமல் வந்த வேகத்தில் தடுப்பு வேலி மீது மோதியுள்ளது. ரயிலில் பயணித்த பல பயணிகள் படுகாயமடைந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மூன்று ஹெலிகாப்டர் மற்றும் 20 அவசர ஊர்தி வாகன உதவியுடன் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், விபத்தில் சிக்கிய பயணிகளில் 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.