கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் போராளிகளை வெற்றி பெற வைக்குமாறு கோருகிறார் மாவை!

கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுகின்ற முன்னாள் போராளிகள், அவர்கள் போட்டியிடும் இடங்களில் வெற்றிபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவை.சோ.சேனாதிராசா மேலும் தெரிவித்ததாவது,
தங்களுடைய உயிரைத் துச்சமாக நினைத்து எங்கள் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களை நாங்கள் தூக்கி வீசிவிட முடியாது. முன்னாள் போராளிகள் தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் வாழ்வதற்கு, இந்தத் தேர்தலில் சில இடங்களில் போட்டியிடுகின்றனர். பெண்கள் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் எவ்வளவு திடமாக செயற்படுகின்றோமோ அதே போன்று போராளிகளும் வெற்றிபெற வேண்டும். இது தேர்தல் வெற்றி மாத்திரம் அல்ல. அவர்களின் எதிர்காலமும் வெற்றிபெற வேண்டும்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் பலர் முன்வரவில்லை. தங்களை வேட்பாளர்களாகப் போட்டி யிட அனுமதிக்குமாறு கோரி பல நூற்றுக் கணக்கானவர்கள் எங்கள் பணியகங்களுக்கு வந்திருந் தனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் முன்னேற்றத்தைக் காண்பிக்கின்றதா இல்லையா ?
முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியான நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக அவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கை உட்பட 21 விடயங்களை நிதி அமைச்சரிடம் நாம் முன்வைத்திருந்தோம். அவற்றில் பெரும்பாலானவை வரவு -– செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று கூறுபவர்களுக்கு இதனைத் தெரியப் படுத்த வேண்டும். ஒரு புறம் அரசியல் ரீதியாக வும் மறுபுறம் எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம்பாடுபடுகின்றோம் என்றார்.