சர்வதேச குதிரை கண்காட்சி! கார் தரிப்பிடத்தில் தீவிபத்து! 1400 கார்கள் நாசம்!

இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச குதிரை கண்காட்சியின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 1400 கார்கள் எரிந்து சாம்பலாகின. இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரத்தில் உள்ள அரங்கு ஒன்றில் சர்வதேச குதிரைக் கண்காட்சி கடந்த சில தினங்களாக நடைபெற்றது.
இந்த கண்காட்சியை கண்டுகளிக்க ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கு காரில் வந்தனர். அருகில் இருந்த பல அடுக்கு கார் நிறுத்தகத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அப்போது, கார் தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த ஒரு காரில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி அங்கிருந்த அனைத்து கார்களிலும் பரவியது.
இந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அனைத்து கார்களும் எரிந்து சாம்பலாகின. 1600 கார்கள் நிறுத்தக்கூடிய கொள்ளவைக் கொண்ட குறித்த தரிப்பிடத்தில் 1400 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தகவலறிந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் கண்காட்சியில் ஈடுபடுத்தப்பட்ட 80 குதிரைகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.