News

சவுதியில் 11 இளவரசர்கள் கைது – அரண்மனையின் முன் போராட்டம் நடத்த முயன்றதால் அதிரடி

சவுதி அரேபியாவில் அரண்மனையின் முன் போராட்டம் நடத்த முயன்றதாக 11 இளவரசர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் (வயது 81) உள்ளார். அவரது மகன் முகமது பின் சல்மான் (32) பட்டத்து இளவரசராக உள்ளார். அனைத்து அதிகாரங்களும் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன.

அங்கு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் கூட, அங்கு ஊழலை தடுப்பதற்காக அவரது தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைக்கப்பட்ட உடனேயே அங்கு ஊழல் புகார்களின் பேரில் ஒரே நேரத்தில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக அங்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய் விலை சரிவால், அந்த நாட்டின் பட்ஜெட்டில் 195 பில்லியன் ரியால் (சுமார் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 500 கோடி) துண்டு விழுந்துள்ளது. அதை சரிக்கட்டுகிற விதத்தில் மானியங்கள் ரத்து செய்யப்படுகின்றன. மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்படுகிறது. மன்னர் குடும்பத்து உறவினர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மன்னர் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் நிறுத்தப்பட்டன.

இது மன்னர் உறவு குடும்பங்களில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தன. இதை எதிர்த்து போராடுவது என மன்னர் குடும்ப உறவினர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில், அங்கு ரியாத் நகரில் உள்ள காசிர் அல் ஹாகிம் அரண்மனையின் முன்பாக 11 இளவரசர்கள் போராட்டம் நடத்தும் நோக்கத்தில் அணி திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது அங்கு மிகவும் அபூர்வமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.

11 இளவரசர்களையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு மன்னர் தரப்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த உத்தரவை ஏற்று அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்யுமாறு மன்னர் குடும்பத்தை காக்கிற தேசிய பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

அவர்கள் உடனடியாக 11 இளவரசர்களையும் கைது செய்தனர். அவர்கள் ஹாயிர் சிறையில் அடைக்கப்பட்டனர். ரியாத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த சிறை, உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இங்குதான் கிரிமினல் குற்றவாளிகள், போராளிகள், அல்கொய்தா பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பறிக்கப்பட்ட மின் கட்டணம், தண்ணீர் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்பதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்களது உறவினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தித்தான் 11 இளவரசர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top