சித்திரவதை முகாம்களைப் பார்வையிட கட்டாயப்படுத்தப்பட்ட ஜேர்மானியர்கள்

நாசிக்கள் என்ற பெயரில் ஜேர்மானியர்கள் செய்த அராஜகங்கள் ஏராளம். சித்திரவதை முகாம்கள் என்று அறியப்படும் முகாம்களில் மனிதர்களை மிருகங்களைப் போல் அடைத்து வைத்து அவர்கள் செய்த அட்டூழியங்கள் மிகப் பல. குருவியை சுட்டுத்தள்ளுவது போல் பொழுது போகாத போதெல்லாம் மனிதர்களை சுட்டுக்கொன்ற மனித மிருகங்களும் அவர்களில் இருந்தன.
இவற்றையெல்லாம் செய்தவர்கள் ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் என்றாலும் அப்போது அங்கு வசித்த பொது மக்களுக்கு இதெல்லாம் தெரியாதா? யாருமே இந்த கோரக் கொலைகளுக்கெதிராகக் குரல் எழுப்பவில்லையே. இதே கேள்விகள் அமெரிக்க மக்கள் மனத்திலும் எழுந்தன. எல்லா நாடுகளின் விடயங்களிலும் தலையிடுவதால் இன்று உலகின் பொலிஸ்காரன் என்று கிண்டலாக வர்ணிக்கப்பட்டாலும் அமெரிக்காவின் தலையீடு அன்று பலரை மீட்டதோடு மட்டுமில்லாமல் இத்தகைய கொடூரச் சம்பவங்கள் உலகின் பிற நாடுகளுக்கும் தெரிய வந்தன.
1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி Ohrdruf முகாமின் துணை முகாமான Buchenwald முகாம் அமெரிக்க ராணுவத்தால் மீட்கப்பட்டது. இது நடந்து சரியாக நான்கு நாட்களுக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் ஜேர்மன் குடிமக்களை இந்த சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் சென்று அவர்களது ராணுவம் செய்த அராஜகங்களை, அட்டூழியங்களை அவர்களுக்குக் காட்டியது.
இக்காட்சிகளின் கோரத்தைக் காண சகியாமல் பலர் மூக்கைப்பொத்திக் கொண்டனர், மயங்கி விழுந்த ஒரு பெண்ணை வீரர்கள் தூக்கிச்சென்றனர். பின்னர் மீட்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர், மருத்துமனை நிரம்பி வழிந்தது.
முந்தின தினம் மட்டுமே 200 பேர் இறந்து போனதாக மருத்துவர் தெரிவித்தார். எதனால் அவர்கள் இறந்து போனார்கள் என்று மருத்துவர் சொன்ன காரணம் இதயத்தை உடைத்தது. “காச நோய், பட்டினி, சோர்வு இவை தவிர வாழ வேண்டும் என்ற விருப்பம் இல்லாததால் பலர் இறந்து போனதாக அவர் தெரிவித்தார்.
அங்கிருந்த ஒரு ஜேர்மானிய வீரனிடம் அவர்களுக்கு என்ன உணவு கொடுக்கப்பட்டது என்று கேட்கப்பட்டபோது, பெரு விரல் தடிமன் கொண்ட ஒரு ரொட்டித் துண்டும், சூயிங்கம் தடிமன் உள்ள வெண்ணை போன்ற ஒரு பொருளும் கொஞ்சம் குழம்பும், ஒரு நாளைக்கு ஒரு தரம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தான்.
யூதர்களும், அரசியல் குற்றவாளிகளும், தாங்கள் சார்ந்த மதத்திற்காக கைது செய்யப்பட்டவர்களும், உடல், மன குறைபாடுகள் உடையவர்களும், ரோம, ரஷ்யக் குடிமக்களும் இங்கு அடைக்கப்பட்டிருந்தார்கள்.
1937ஆம் ஆண்டிலிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 2,50,00 பேர் இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய மருந்துகளை சோதித்துப்பார்க்கும் மிருகங்களாகப் பலர் பயன்படுத்தப்பட்டனர். இதில் ஏராளமானவர்கள் இறந்து போனார்கள்.
பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், வேறு பலர் தூக்கிலிடப்பட்டார்கள். முகாமைச் சுற்றிலும் யாரும் தப்பித்துப் போய்விடாத வகையில் மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க ராணுவம் 21,000 பேரை மீட்டது, ஆனால் அதற்கு முந்தின தினமே 28,000 பேரை ஜேர்மனி அங்கிருந்து வெளியேற்றியிருந்தது.
மீட்பு நடவடிக்கைக்காக சென்ற அமெரிக்க வீரர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த மனிதர்களையும் ஏற்கனவே செத்துப்போன மனிதக்குவியல்களையும் கண்டார்கள். பல போர்களைக் கண்ட supreme commander Dwight D. Eisenhower, தான் கண்ட இந்தக் காட்சியைப் போல் வேறு எதுவும் தன்னை இவ்வளவு அதிர்ச்சிக்குள்ளாக்கியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
முதல் 1950 வரை இந்த இடத்தை சோவியத் யூனியன் நாசிக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தியது. இன்று அது உயிரிழந்த பலரின் நினைவிடமாக நின்று கொண்டிருக்கிறது.