சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: அமுலுக்கு வந்த புதிய சட்டம்

இந்தியாவின் அரியானா மாநிலத்தில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரியானா மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால், மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். அரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், ‘அரியானாவில், சமீபத்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் கவலை அளிக்கின்றது.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, பொலிசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அதற்காக, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க, வகை செய்யும் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு பதிவான பாலியல் புகார்களில், 25 சதவிதம் பொய்யானவை. இது போன்ற புகார்களில் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் மக்கள் மத்தியில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். ஆனால், 75 சதவித கற்பழிப்பு சம்பவங்கள், பெரும்பாலும் உறவினர்கள் மற்றும் பழக்கமானவர்களாலேயே நிகழ்வது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பொலிசாரின் நடவடிக்கை மட்டுமின்றி, சமூகத்துக்கும் பொறுப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மட்டும் அரியானாவில் 9 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.