சென்னை ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சசிகலாவுக்கு எதிராக சாட்சியம்

சென்னை: சசிகலா கேட்ட தகவல்களை தருவதற்கு தயாராக உள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷனில், திமுக மருத்துவர் அணியை சேர்ந்த நிர்வாகி சரவணன், ஜெயலலிதா சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், ஜெயலலிதா உறவினர் தீபா, தீபக், தீபா கணவர் மாதவன், அக்குபஞ்சர் டாக்டர் சங்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எம்சி டீன் முரளிதரன், முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். விசாரணையில் சாட்சியம் அளித்த பலர் சசிகலாவின் பெயரை குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, சசிகலாவுக்கு கடந்த மாதம் 21ம் தேதி ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதில், “ உங்களுக்கு எதிராக சிலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். அவ்வாறு சாட்சியம் அளிக்கும் போது, நீங்கள் இல்லாத காரணத்தினால் அது சம்பந்தமாக உங்களது விளக்கத்தை ஆணையம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நீங்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்க முடியும் என்று கருதினால் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ அல்லது பிரமாண வாக்குமூலமாகவோ உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம். இதன் பின்னர் தேவைப்படும் போது உங்களை சாட்சியம் அளிக்க நேரில் அழைப்போம்” என்று கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்திற்கு கடந்த 5ம் தேதி வந்தார். தொடர்ந்து, மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எனக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்களின் சாட்சியத்தின் நகல், சாட்சிகளின் வக்கீல் யார் என்பது போன்ற விவரத்தையும் அளிக்க வேண்டும். இந்த ஆவணங்களை அளித்த பின்பு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க 15 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும். இதன் பின்பு உரிய ஆவணங்களுடன் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்யவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், சசிகலா தரப்பில் வழக்கறிஞர் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் தகவல்களை கேட்கும் பட்சத்தில் அனைத்து விவரங்களையும் அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்பிறகு, சசிகலா தரப்பினர் தாக்கல் செய்யும் பதில்களை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதை தொடர்ந்து சசிகலாவை நேரில் ஆஜராகவோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலா தரப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, சசிகலாவை அழைத்து வருவது தொடர்பாக ஆணையம் தரப்பில் கர்நாடக சிறைத்துறையிடம் பேச திட்டமிட்டுள்ளதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.