சென்னை ஜெயலலிதா மர்ம மரணம் சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம்

ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு எதிராக பலர் சாட்சியம் அளித்துள்ளனர். இதனால், சாட்சியம் அளித்துள்ளவர்களின் பெயர், விவரங்களை அளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். ெஜயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் விசாரணையை தொடங்கியது. திமுக மருத்துவர் அணி நிர்வாகி டாக்டர் சரவணன், ஜெயலலிதா சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர், ஜெயலலிதா உறவினர் தீபா, தீபக், தீபா கணவர் மாதவன், அக்குபஞ்சர் டாக்டர் சங்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எம்சி டீன் முரளிதரன், முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் விமலா, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
அப்போது, ஆணையத்தில் சாட்சியம் அளித்த பலர் சசிகலாவின் பெயரை குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. மேலும், 28 பிரமாண பத்திரங்களும், 422 புகார் மனுக்களும் பெறப்பட்டுள்ளன. அதிலும், சசிகலா மீது குற்றச்சாட்டு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு கடந்த 21ம் தேதி ஒரு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உங்களுக்கு எதிராக சிலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். அவ்வாறு சாட்சியம் அளிக்கும் போது, நீங்கள் இல்லாத காரணத்தினால் அது சம்பந்தமாக உங்களது விளக்கத்தை ஆணையம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நீங்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்க முடியும் என்று கருதினால் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ அல்லது பிரமாண வாக்குமூலமாகவோ உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம். இதன் பின்னர் தேவைப்படும் போது உங்களை சாட்சியம் அளிக்க நேரில் அழைப்போம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சம்மனை கடந்த 23ம் தேதி சசிகலா பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகலா ஆவணங்களை சமர்ப்பிக்க நாளையுடன் (ஜன. 7ம் தேதி) கால அவகாசம் முடிவடைகிறது. இதை தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் சசிகலா கூறியிருப்பதாவது:
எனக்கு எதிராக ஆணையத்தில் சிலர் சாட்சியம் அளித்துள்ளதாக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ள போதிலும், எனக்கு எதிரான சாட்சியங்களின் நகலை அளிக்கவில்லை. இதனால், என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்து என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. நான் இல்லாத போது எனக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சியங்களை மறுக்கிறேன்.
அந்த சாட்சியங்களுக்கு எனது தரப்பில் வலுவான ஆதாரங்களை அளிக்க தயாராக உள்ளேன். எனக்கு எதிராக சாட்சியங்கள் அளித்தவர்களின் நகலை எனக்கு ஆணையம் அனுப்பாத நிலையில், ஆணையம் சம்மன் அடிப்படையில் என்னால் செயல்பட இயலாது. அதேபோன்று உரிய ஆவணங்களுடன் என்னால் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய முடியாது. ஒருவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது, அந்த நபர் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய வாய்ப்பு வழங்குவதற்கு விசாரணை ஆணைய சட்டம் 1952 பிரிவு 8 பி அனுமதி அளிக்கிறது. அதேபோன்று குற்றம்சாட்டிய நபர்களை குறுக்கு விசாரணை செய்யவும் தனக்காக வக்கீல் மூலம் வாதாடவும் ஆணைய சட்டப்பிரிவு 8 சி அனுமதிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை விசாரணைக்காக அழைக்கும் போது அதுவரை யாரெல்லாம், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார்களோ அந்த சாட்சியங்களின் நகலை குறுக்கு விசாரணை செய்வதற்கு ஏதுவாக ஆணையம் அளிக்க வேண்டும் என்று ஆணைய விதியில் கூறப்பட்டுள்ளது. தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்பதை நிரூபித்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். அவ்வாறு சாட்சியங்களின் நகலை எனக்கு வழங்கினாலும் தற்போது நான் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருவதால் என்னால் ஆணையத்தில் நேரில் ஆஜராகி எனக்கு எதிரான சாட்சியங்களை மறுக்க முடியாது.
எனவே, எனக்கு எதிராக சாட்சியங்களை மறுத்து நான் அளிக்கும் வாக்குமூலத்தை எனது வக்கீல் மூலம் ஆணையத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். சாட்சியங்களின் நகலை எனது வக்கீல் மூலம் பெற்ற பின்பு என் மீதான குற்றச்சாட்டை அறிந்து கொள்ளவும், எனது தரப்பு விளக்கத்தை அளிக்க போதிய வாய்ப்பும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். இதன் பின்பே எனது தரப்பு சாட்சி ஆவணங்களை தாக்கல் செய்ய இயலும். எந்தவித காலதாமதமும் இல்லாமல் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்களின் பெயர், அவர்கள் சாட்சியம் அளித்த தேதி, அவர்கள் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள புகார் மனுவோ அல்லது பிரமாண பத்திரமோ என்பது போன்ற விவரங்களை எனக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ெஜயலலிதா உயிர் பிரிந்தது எப்போது?: ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார் என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. ஆனால், எம்எம்சி உடற்கூறுயியல் தலைவர் சுதாசேஷையன் இரவு 10.30 மணிக்கு ஜெயலலிதா மரணடைந்தார் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நேரம் முரண்பாடாக இருப்பதால் ஜெயலலிதா உயிர் பிரிந்தது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அப்போலோ நிர்வாக மருத்துவர், உடற்கூறுயியல் துறை தலைவர் சுதா சேஷையனை மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்திருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன
8ம் தேதி மனு மீது விசாரணை: சசிகலா அனுப்பிய மனு மீது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துகிறார். விசாரணையின் முடிவில் அவருக்கு சாட்சியம் அளித்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் அனுப்பப்படுமா என்பது தெரிய வரும். மேலும், நகல் கிடைத்த பிறகு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்தும் நீதிபதி முடிவு செய்வார் என்று விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தண்டனை கைதி 9234க்கு சம்மன் வழங்கிய தலைமை கண்காணிப்பாளர்: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் சார்பில் சசிகலாவுக்கு கடந்த 21ம் தேதி ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆதாரங்களை ஒப்படைக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை கடந்த 23ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தலைமை கண்காணிப்பாளர் (மத்திய சிறை) தண்டனை கைதி 9234 எண் கொண்ட வி.கே.சசிகலாவுக்கு வழங்கினார் என்பதை அவரது மனுவில் தெரிவித்துள்ளார்.