News

ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மாற்றம் செய்வது மக்களின் இறைமைக்கு எதிரானது

ஜனாதிபதியாக ஆறு வருடங்கள் தொடரமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியமைக்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்வைக்கப்பட்ட விவாதங்களுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளிவைத்துள்ளது. இது தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள சகல தரப்பினரையும் இன்று (12) எழுத்து மூலமான சமர்ப்பிப்புக்களை முன்வைக்குமாறும் கோரியுள்ளது.

இந்த விண்ணப்பம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட இறைமையைப் பயன்படுத்தி 19ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட முன்னரே மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துவிட்டார்கள் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

“தற்போதைய ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தேர்தலின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2015 ஜனவரி 9ஆம் திகதி ஆறு வருடங்களுக்காக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மாற்றம் செய்வதானது மக்களின் இறைமைக்கு எதிரானதாக அமையும். கடந்தகால விளைவுகள் குறித்து 19ஆவது திருத்தச்சட்டமூலத்தில் எந்தவொரு ஷரத்தும் இல்லை.

அரசியலமைப்பானது கடந்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்களை மாற்றும் வகையில் திருத்த முடியாது” என சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இடையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர.டி.சில்வா, 19ஆவது திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுக்கு மட்டுமானது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். “ஜனாதிபதி தனது இணையத்தளத்தில் கூட பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவதாகக் கூறியுள்ளார். ஐந்து வருடங்களாக குறைக்க அவர் இணங்கியுள்ளார்” என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏழு இடையீட்டு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன், இவை தொடர்பில் வாய்மூல விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனு தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நியமித்திருந்தார். பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரசியலமைப்பின் 129 (1) சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய தன்னுடைய பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரியிருந்தார்.

“அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில், ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் என்பதுடன், அரசியலமைப்பின் 32(1) சரத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி பதவியேற்றுக் கொண்டேன். ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமையை அறிவித்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் ஆறு வருடங்களுக்கு நான் இந்தப் பதவியில் தொடர்வதற்கு ஏதாவது தடைகள் உள்ளனவா” என ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியிருந்தார்.

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், மனோகர.டி.சில்வா, அலி சப்ரி, பைசர் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த தீரணாகம உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top