ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை

உடலில் சக்தி இருக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் ஜனாதிபதி
ஒழுங்கில்லாத அரச நிர்வாகத்தை சரியான முறையில் கொண்டு செல்வதையே இன்றைய பிரதான பொறுப்பாகக் கொண்டுள்ள நான், இன்னும் இரண்டு வருடங்களில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதல்ல எனது இன்றுள்ள வேலை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள், பணிப்பாளர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். இச்சமயம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் பாராளுமன்ற உறுப்பினராகியதும், ஜனாதிபதியானதும் நான் எதிர்பாராமல் இடம்பெற்ற நிகழ்வுகளாகும். இந்நாட்டில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர்கள் தான் ஜனாதிபதியாகி உள்ளார்கள். ஆனால் நான் மாத்திரம் தான் அவை இரண்டும் இல்லாது அமைச்சராக இருந்து ஜனாதிபதியாகி உள்ளேன். அதுவும் நான் அமைச்சராகவிருந்து 42 நாட்களில் ஜனாதிபதியானேன்.
இன்றுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதையே நான் பிரதான பணியாகக்கொண்டுள்ளேன். நான் ஒழுங்கில்லாத அரச நிர்வாகத்தை சரியான முறையில் கொண்டு செல்வதில் அதிக கவனம் செலுத்துகின்றேன். இதற்கு பல சவால்கள் உள்ளன. அவ்வாறான சவால்களுடன் தான் நான் இப்பயணத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது உடலில் சக்தி இருக்கும் வரையும் அரசியலில் ஈடுபடுவேன்.
எனது செயற்பாட்டு அரசியல் வாழ்வுக்கு ஐம்பது வருடங்களாகி உள்ளன. எனக்கு பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அரசியல் செய்வேன். அவ்வாறு தான் எனது மரபணு உருவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.