News

ஜெனிவாவில் இலங்கையின் கோரிக்கை நிராகரிப்பு!

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட கூட்டத் தொடரின் போது ஜெனிவாவுக்கான இலங்கை அரசின் பிரதிநிதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று இலங்கைக்கு விசேடமான அணுகுமுறையொன்று கையாளப்பட வேண்டும் என்று ஜெனீவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க விடுத்த கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட கூட்டத்தொடரின் போது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பப்படும் வாய்மூல கேள்விகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அலுவலகத்திற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கோரிக்கை விடுத்தார்.

எனினும் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகுமுறை அல்ல என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான விசேட குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விசேடமான அணுகுமுறையொன்று கையாள முடியாது என்று கூறி நிராகரித்துவிட்டனர்.

குறிப்பாக எந்தவொரு அரசையும் விசேடமாக கருத்தில்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்று மிகத் தெளிவாக ரவிநாத் ஆரியசிங்க முன்னிலையிலேயே குறிப்பிட்ட சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் விசேட குழுவின் பிரதிநிதியான பேராசிரியர் கேஸ்டர்ன் ஸ்டேர்ன்பேர்க், வாய்மூலம் எழுப்பப்படும் கேள்விகளை நன்கு செவிமடுத்து அவற்றுக்க பதிலளிக்க வேண்டியது அரசுகளின் பொறுப்பும் கடமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் விசேட குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் கேஸ்டர்ன் ஸ்டேர்ன்பேர்க், நோர்வே உச்ச நீதிமன்றின் முன்னாள் பதில் தலைமை நீதியரசர் என்பது மாத்திரமன்றி சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச ரீதியில் மிகவும் மதிக்கப்படும் சட்ட நிபுணர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பல புதிய சட்டங்களையும் கட்டளைச் சட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதிலும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் பல கேள்விகளை எழுப்பிய ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கூட்டத்தொடரில் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதன்போது தலையிட்ட ஜெனீவா அலுவலகத்திற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மின் அஞ்சல் ஊடாக கேள்விகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன்போது தலையிட்ட சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் விசேட குழுவின் பிரதிநிதி பேராசிரியர் கேஸ்டர்ன் ஸ்டேர்ன்பேர்க், அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்று கூறி நிராகரித்துவிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top