India

ஜெயலலிதாவின் அறையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

போயஸ் கார்டன் வீட்டில் சீல் வைக்கப்பட்ட ஜெயலலிதா அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில் ஜெயலலிதாவின் பல கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தார் போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கில் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்படி கடந்த நவம்பர் 9ம் தேதி சசிகலா உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில் 1500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். 5 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த சோதனையில் ரூ.1,480 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கான பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றினர். அதைதொடர்ந்து, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகனும், ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரியுமான விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா மற்றும் உறவினர்கள் கார்த்திகேயன், ராஜராஜன், டி.டி.வி.தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார், டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வி. பொதுமேலாளர் நடராஜன், ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவன நிர்வாகிகள் உள்பட பலரும் வருமான வரி அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, நவம்பர் 17ம் தேதி விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்பிரியா, ஷகிலா மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் 2வது முறையாக வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அந்த விசாரணையை தொடர்ந்து பூங்குன்றன் அளித்த தகவலின் அடிப்படையில் அன்றைய தினமே போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, இளவரசி மகன் விவேக் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்து முறையாக அனுமதி இல்லாமல் ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதா வசித்து வந்த 2 அறைகளை மூடி சீல் வைத்தனர். இதற்கிடையே தமிழக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி கடந்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக முதற்கட்ட நடவடிக்கையாக வீட்டின் நீளம், அகலம் மற்றும் அறைகள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா வசித்த 2 அறைகளில் வருமான வரித்துறை சீல் வைத்திருந்ததால் அவர்களால் ஆய்வு செய்ய முடியவில்லை.

அப்போது சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் 3 மாதத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதனால் சீல் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் 2 அறைகளிலும் சோதனை நடத்தி அறைகளை திறந்து விடுமாறு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையிலேயே போயஸ் கார்டனில் 2வது முறையாக 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பிற்பகல் 12.30 மணி முதல் நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முதல் சோதனையின் போது ஜெயலலிதாவின் 2 அறைகளின் சீல்களை அகற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள் மற்றும் சசிகலாவின் வெளிநாட்டு முதலீடுகள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களை ஜெயலலிதா ரகசியமாக குறிப்பிட்டிருந்த கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தங்கம், வைர நகைகள் இருந்ததா என்பது குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த சோதனையின் போது, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சம்பவத்தால் போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது




Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top