ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆஜர் செப்டம்பர் 22ம் தேதி போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேற்று ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவக்குமார் நேற்று முன்தினம் விசாரணை கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் போயஸ்கார்டனின் சகலமுமாக இருந்த ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர் பூங்குன்றன் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்து காலை 10.38 மணிக்கு ஆணையத்தில் ஆஜரானார்.
அவர் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர் என்பதற்கும் மேல் போயஸ்கார்டனில் எல்லாமுமாக இருந்தார். போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருக்கு என ஒரு அறை கொடுக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் வந்தால் கூட அது முதலில் பூங்குன்றன் கைக்கு தான் போகும், பின்னர் சசிகலா பார்வைக்கு சென்று கடைசியாக தான் ஜெயலலிதாவுக்கே அந்த கடிதம் செல்லும். சுமார் 17 வருடங்கள் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்துள்ளார். இதனால் ஜெயலலிதா மரணம் குறித்த பல தகவல்கள் பூங்குன்றனுக்கு தெரியும் என்பதால் நீதிபதி ஆறுமுகச்சாமி அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, பூங்குன்றனிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி நீங்கள் எப்படி ஜெயலலிதாவுக்கு உதவியாளராக சேர்ந்தீர்கள். அரசியல் ஆர்வம் காரணமாக அவரிடம் உதவியாளராக சேர்ந்தீர்களா? என கேட்டார். அதற்கு பூங்குன்றன், எனக்கு ஆன்மிகத்தில் மட்டும் தான் ஆர்வம் உள்ளது என கூறினார்.
உடனே நீதிபதி ஆறுமுகச்சாமி சிரிப்புடன் ரஜினி போலவே ‘என்ன ஆன்மிக அரசியலா’ என கலாய்த்தார். இதை கேட்ட பூங்குன்றன் உள்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி, ஜெயலலிதா உடல் நலம் குறித்தும், செப்டம்பர் 22- ந்தேதி போயஸ் கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்தும் பல அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். அதற்கு சில கேள்விகளுக்கு மட்டும் தான் பூங்குன்றன் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல கேள்விகளுக்கு எனக்கு தெரியாது என்றே கூறியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கும் போதே மின்தடை ஏற்பட்டதால் பூங்குன்றன் அளித்த பதில்களை டைப் செய்ய முடியாமல் போனது. இதனால் விசாரணை நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணையை 12.30 மணிக்கே முடித்தார்.
முன்னதாக, அதிமுக பிரமுகரான மதுரைபாலன் என்பவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அவரிடம், நீதிபதி ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள் கேட்ட போது நான் எதையும் பார்க்கவில்லை, எனக்கு சிலர் சொன்னார்கள் என சசிகலா தரப்பினருக்கு எதிராக பதில் அளித்தார். இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இந்த நிலையில் ஆணையத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் நீதிபதி கேட்ட கேள்விகள் என்ன? என கேட்ட போது அதற்கு அவர் இன்று ‘அஷ்டமி’ அதனால் மற்றொரு நாள் உங்களுக்கு பதில் சொல்லுகிறேன். ஜெயலலிதாவுடன் இருந்த நான் இதை கூட பார்க்கலனா எப்படி. வருகிற 23-ந் தேதி என்னை மறுபடியும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என கூறினார்.
தொடர்ந்து சிறிது நேரத்தில் வெளியே வந்த நீதிபதி ஆறுமுகச்சாமியிடம் கேட்டபோது, நான் கேட்ட சில கேள்விகளுக்கு பூங்குன்றன் பதில் அளித்தார். மின்தடை காரணமாக விசாரணையை முடித்துவிட்டோம். விசாரணை ஆணையத்தில் தொடர்ந்து 2 நாட்கள் ஏற்பட்ட மின்தடை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆணையத்தில் கால அவகாசம் கோரினார் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிஇன்று (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை ஆஜராக சொல்லி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.40 மணியளவில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி, நீதிபதி ஆறுமுகச்சாமியிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நாளை சட்டசபை கூட்டம் நடக்க இருப்பதால் முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டி உள்ளது. ஆகையால் பணி காரணமாக என்னால் நாளை ஆஜராக முடியாது. ஆகவே மற்றொரு நாள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நான் ஆஜராகிறேன் என கால அவகாசம் கோரி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதி ஆறுமுகசாமி அவரது கோரிக்கையை ஏற்று கொண்டார்.