ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததா?அரசு மருத்துவர் சுதாசேஷய்யன் விளக்கம்

ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து விசாரணை ஆணைய நீதிபதி கேட்ட கேள்விக்கு அரசு மருத்துவர் சுதாசேஷய்யன் பதில் அளித்தார்.
ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்த போது அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து விசாரணை ஆணைய நீதிபதி கேட்ட கேள்விக்கு அரசு மருத்துவர் சுதாசேஷய்யன் பதில் அளித்தார்.
அரசு மருத்துவர் சுதா சேஷய்யன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் சென்னை மருத்துவக்கல்லூரி உடற்கூறுயியல் துறை தலைவர் சுதாசேஷய்யன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததும் அவரது உடலை பதப்படுத்தி வைப்பதற்காக ‘எம்பாமிங்’ என்ற மருத்துவ நடைமுறையை சுதாசேஷய்யன் தலைமையிலான மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் எம்பாமிங் நடைமுறை எப்படி மேற்கொள்ளப்படுகிறது?, ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது?, எத்தனை நாட்கள் அவரது உடலை பாதுகாத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு எம்பாமிங் செய்யப்பட்டது? என்று சுதாசேஷய்யனிடம், நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார்.
கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததா?
ஜெயலலிதா முகத்தில் காணப்பட்ட கரும்புள்ளிகள் எம்பாமிங் செய்ததனால் தான் ஏற்பட்டதா?, எம்பாமிங் செய்து சில நாட்கள் ஆனால் தான் இதுபோன்று கரும்புள்ளிகள் வெளியில் தெரியும் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறதே?, எம்பாமிங் செய்த போது ஜெயலலிதாவின் கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததா?(ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது கால்கள் துண்டிக்கப்பட்டதாக வெளியான தகவல் அடிப்படையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது) என்பது போன்று பல்வேறு கேள்விகளையும் நீதிபதி கேட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து கேள்விகளுக்கும் சுதாசேஷய்யன் பதில் அளித்தார். மதியம் 12.30 மணி வரை 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த சுதாசேஷய்யன் நிருபர்களிடம் கூறும்போது, ‘2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 10.30 மணிக்கு ஜெயலலிதா இறந்து போனதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து அவரது உடலை எம்பாமிங் செய்ய வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இரவு 11.40 மணிக்கு நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இரவு 12 மணிக்கு எம்பாமிங் பணி தொடங்கியது. சுமார் 20 நிமிடத்தில் எம்பாமிங் செய்யும் பணி நிறைவு பெற்றது. எம்பாமிங் செய்தது பற்றி நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு நான் பதில் அளித்தேன். ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் நான் அளிக்கவில்லை. அவர் இறந்த பின்பு தான் அவரது உடலைத்தான் மருத்துவமனையில் பார்த்தேன்’ என்றார்.
எம்பாமிங் செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்றும், ஆனால் குறுகிய காலத்தில் எம்பாமிங் செய்ததாக கூறுவது சந்தேகத்தை எழுப்புவதாக சிலர் குற்றம்சாட்டி உள்ளனரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு ஆட்டோமெட்டிக் எந்திரம் மூலம் எம்பாமிங் செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் போதுமானது என்று தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக மருத்துவர் சத்யபாமா இன்று(வியாழக்கிழமை) ஆணையத்தில் ஆஜராகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் யார், யார்?, அவர்கள் என்னென்ன சிகிச்சை அளித்தனர்?, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை பார்ப்பதற்காக வந்த முக்கிய பிரமுகர்கள் யார், யார்? என்பது போன்ற அனைத்து விவரமும் இவருக்குத்தான் தெரியும் என்பதால் அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது.
அவரது பதிலை பெற்று அதன் அடிப்படையில் எந்தெந்த மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஆணையம் முடிவு செய்துள்ளது. அதேபோன்று ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார், உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் நேரடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள ஆணையம் அவர்களுக்கும் சம்மன் அனுப்ப உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோர் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆணையம் கடந்த மாதம் 22-ந் தேதி சம்மன் அனுப்பியது.
அதன்படி கடந்த 2-ந் தேதிக்குள் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்து இருக்க வேண்டும். அப்பல்லோ நிர்வாகம் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து ஆவணங்களை தாக்கல் செய்ய 5-ந் தேதி வரை ஆணையம் கால அவகாசம் அளித்தது. இந்த நிலையில் அப்பல்லோ நிர்வாக வக்கீல்கள் ஆணையத்தில் நேற்று ஆஜராகி மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதைதொடர்ந்து, அப்பல்லோ நிர்வாகம் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய 12-ந் தேதி வரை ஆணையம் கால அவகாசம் வழங்கி உள்ளது.