India

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது சட்ட விரோதம் அல்ல : உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு

சென்னை: ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பது சட்டவிரோதம் அல்ல என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.கடலோரப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ள கூடாது என்று கடலோர பகுதி ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளுக்கு முரணாக சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே, கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதில் தருமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு அதே இடத்தில் ₹15 கோடி செலவில் நினைவிடம் கட்டுவதற்கான அரசாணை 2016 டிசம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகள் 1991ல் கொண்டுவரப்படுவதற்கு முன்பே மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைக்கப்பட்டது.

எனவே, அந்த வளாகத்திற்கு உள்ளே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது சட்டவிரோதம் இல்லை. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்பிறகு இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் பதில் மனு தொடர்பாக மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top