ஜெயலலிதா இதயம் நின்ற போது சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை: மருத்துவர் புகார்

ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது தான் மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படவில்லை என அப்பல்லோ மருத்துவர் சுவாமிநாதன் புகார் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக் கூறப்பட்டதையடுத்து அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறுமுகசாமியின் உத்தரவின் பேரில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை கமிஷனில் தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து அப்பல்லோவில் பணிபுரியும் இதய நிபுணர் சுவாமிநாதன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழந்த போது நான் மருத்துவமனையில் இருந்தும் அவருக்கு நான் சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதய முடக்கம் ஏற்பட்ட போது இதய சிகிச்சை நிபுணரை சிகிச்சையளிக்க அனுமதிக்காதது ஏன் என்றும் அவ்வாறு உத்தரவிட்டது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது