ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வீடியோ ஆதாரங்கள் தாக்கல்

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வீடியோ ஆதாரங்களை தினகரன் தரப்பினர் தாக்கல் செய்தனர். வீடியோ பதிவுகளை நீதிபதி பார்த்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி நேரடி விசாரணையை தொடங்கிய ஆணையம் கடந்த மாதம் 22-ந்தேதி வரை 17 பேரிடம் விசாரணை நடத்தியது.
புத்தாண்டு விடுமுறைக்கு பின்பு நேற்று மீண்டும் ஆணையம் கூடியது.
நேற்று காலை 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த உடல்நிலை பாதிப்பு குறித்து தெரியுமா?, அதுதொடர்பாக உங்களது தாயார்(இளவரசி) ஏதேனும் தெரிவித்து உள்ளாரா?, அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை குறித்து தெரியுமா?, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்து போது அவரை பார்த்து உள்ளர்களா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கிருஷ்ணப்பிரியா பதில் அளித்துள்ளார். மதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணப்பிரியா, ‘விசாரணை ஆணையத்தில் தெரிவித்ததை வெளியில் சொல்வது சரியாக இருக்காது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக ஊடகங்களிடம் ஏற்கனவே தெரிவிக்கவில்லை’ என்று நிருபர்களிடம் கூறினார்.
ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு வரை யார், யார் பணியாளர்களாக இருந்தார்கள் என்பது குறித்த விவரத்தை தாக்கல் செய்யும்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு ஏற்கனவே ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றி வந்தவர்களின் பட்டியலை பூங்குன்றன் தனது உதவியாளர் மூலம் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
அதில், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை செய்து வந்த ராஜம்மா, காவலர்கள், டிரைவர்கள், டைப்பிஸ்டுகள் என 15 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 பேருக்கும் சம்மன் அனுப்பி ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
டி.டி.வி.தினகரன் தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் ஆவணங்களை ஒரு வாரத்துக் குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விசாரணை ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. இதைதொடர்ந்து டி.டி.வி.தினகரன் தரப்பில் அவரது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான வீடியோ பதிவு காட்சிகளை ‘பென் டிரைவ்’ மூலம் நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஏற்கனவே வெளியிட்ட வீடியோவை தவிர்த்து 4 வீடியோ பதிவுகள் அதில் இருந்ததாகவும், அந்த 4 வீடியோ பதிவுகளும் சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவை பெற்றுக்கொண்ட நீதிபதி, உடனடியாக தனது அறையில் உள்ள கணினி மூலம் அந்த வீடியோ காட்சிகளை பார்த்தார். இந்த வீடியோ அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.
விசாரணை ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உயிரோடு இருந்தார், உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையிலான வீடியோ பதிவை டி.டி.வி.தினகரன் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளேன் என்றார்.
சசிகலா தரப்பிலும் வீடியோ மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பிலும் ஆணையத்தில் ஆஜராக எனக்கு சசிகலா அனுமதி வழங்கி உள்ளார். ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான வீடியோ மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு ஆணையம் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கி உள்ளதால் அதற்குள் ஆணையத்தில் சசிகலா தரப்பில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன்’ என்றார்.