ஜெயலலிதா மரணம், மத்திய அரசின் கழுகு என தொடர் விமர்சனம் : உறவினர்களுக்கு சசிகலா கண்ணீர் கடிதம்

சென்னை: தமிழக அரசியலில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் இன்னும் தலைதூக்கி இருப்பதாக அதிமுக தொண்டர்களிடையே புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது. அதை உறுதி செய்யும் விதமாக சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் என சசிகலாவின் உறவினர்கள் ஆளாளுக்கு அதிகாரம் செலுத்தும் விதமாக வெளியில் செயல்பட ஆரம்பித்த விவகாரம் இப்போது வெளியே வந்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உறவினர்களுக்கு சசிகலா ஒரு கண்ணீர் கடிதத்தை அவசரமாக எழுதியுள்ளார். அது சசிகலாவின் குடும்பத்தில் கடும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
சசிகலா பெங்களூர் சிறையில் இருப்பதால், கட்சியை வழி நடத்துவது யார் என்ற மோதல் தினகரன், திவாகரன், விவேக் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவை கைக்கு வராது என உணர்ந்து தனிக்கட்சி ஆரம்பிக்க முடிவு செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். அப்போலோ மருத்துவமனை தமிழகத்தில் உள்ள அவர்களின் கிளைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தினால் நாங்கள் அறிவிப்போம் என பிரதாப் ரெட்டி தெரிவித்தார். அந்த நேரத்தில் மத்திய அரசின் ‘கழுகு’ ஒன்றும் மருத்துவமனையில் இருந்தது. அந்த கழுகு அவருக்கு வேண்டியவருக்கு முதல்வர் பதவியை வாங்கி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தது. தற்போது அந்த கழுகு உயர்ந்த பதவிக்கு போய்விட்டதால் அவரது பெயரை சொல்லக் கூடாது.
சசிகலா முதல்வராக வேண்டும் என்று முதலில் கூறியவர் பின்னர் தியானம் இருக்க சென்றுவிட்டார். பின்னர், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். பதவியேற்றதும் என்னிடம் வந்து நான் இன்னொரு ஓபிஎஸ்சாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இப்போதுதான் தெரிகிறது அவர் ஓபிஎஸுக்கு மேலாக இருக்கிறார் என்று. இதற்கெல்லாம் சேர்த்து ஆர்கேநகரில் மக்கள் முற்று புள்ளியை வைத்து விட்டார்கள்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். திவாகரன் கழுகு என யாரை குறிப்பிட்டார்? என்று உளவுத்துறை விசாரித்த போது, அவர் கூறிய மத்திய அரசின் கழுகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறார்கள். இந்த விவகாரம் டெல்லியை சூடாக்கியுள்ளது.
இன்னொரு பக்கம் சசிகலாவின் கணவர் நடராஜன், ‘‘நானும் எனது மனைவி சசிகலாவும் வருகிற ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளோம்’’ என்றார். மேலும், 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த இலவச திட்டங்களை உருவாக்கியது அவர் தான் என்றும். தான் எழுதிக் கொடுப்பதை ஜெயலலிதா அப்படியே பின்பற்றுவார். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவை தூக்கிவிட்டது தாங்கள் தான்’’ என்றும் கூறியிருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருந்தது. குடும்ப பிரச்னை ஒரு பக்கம் ஓடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், தினகரன் புதிய கட்சியை ஆரம்பிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அவருடைய ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பால், தினகரன் திடீரென பல்டி அடித்தார்.
நீலகிரியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘அதிமுக அம்மா என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம். நாங்கள் புதுக்கட்சி எதுவும் தொடங்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, எங்களது எண்ணங்களில் அதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால், அதிமுக அம்மா என்ற பெயரை மீட்டெடுப்பதே எங்களது முதல் குறிக்கோள். விரைவில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்போம். தற்போது அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது, சட்டமன்றத்தில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள்’’ எனக் கூறினார்.
தொடர்ச்சியாக இப்படி ஜெயலலிதா குறித்தும் அதிமுக குறித்தும் சசிகலாவின் குடும்பத்திற்குள் நித்தம் ஒருவர் வெளியே வந்து புதிய புதிய வடிவில் பேசி வருவதை சசிகலா ரசிக்கவில்லை. மேலும் கடைசியாக பொங்கலுக்கு சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், ‘‘மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் பணியகம்’’ என்ற அமைப்பை தொடங்கி அதிமுகவில் இயங்கி வரும் இளம் பாசறையினைப் போல அமைப்பை கட்டமைப்பு செய்தது அதிமுகவினரிடையே பிடிக்க வில்லை. மேலும், அதிமுகவிலுள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவிலும், இளம் பாசறையின் முக்கியப் பொறுப்பாளர்களையும் வளைக்க ஜெய் ஆனந்த் தூது விட்டுள்ளார்.
இதுகுறித்து சசிகலா அவரது வழக்கறிஞர் மூலம் என்ன நடந்தது என அனைத்தையும் கவனமாக கேட்டவர், மிகவும் கோபப்பட்டவர், டென்ஷனில் இளவரசியிடம் பேசியுள்ளார். என்ன நடக்கிறது வெளியே? யாரைக் கேட்டு இவர்கள் இப்படி ஆடுகிறார்கள் என கொதித்து எழுந்தவர் அவரது தரப்பில் கணவன், தம்பி, மகன் என அனைத்து உறவுகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார். அதில், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அந்தக் கடிதத்தில், ஏற்கனவே மக்கள் மத்தியில் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தை ஒரு குடும்பம் கைப்பற்றி கட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பதாகவும், குடும்ப அரசியல் செய்துள்ள சசிகலா தமிழகம் முழுவதும் திருச்சி, கோவை, மதுரை, சென்னை என நான்கு மாகானங்களாக வைத்து ஒவ்வொரு ஊருக்கு ஒருவரை தலைமையாக்கி கட்சியை கைப்பற்றியுள்ளதாக மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது. இதன் பின்னணியில்தான் ரெய்டு உள்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் சொல்வது போல ஆளாளுக்கு நீங்கள் இப்படி ராஜ்ஜியம் செய்து வந்தால் நான் காலம் முழுவதும் உள்ளேயே கிடக்க வேண்டியதுதான்.
இதற்காகவா நான் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். நான் கட்டிய கோட்டையை நீங்களே சரிப்பது வேதனையாக இருக்கிறது. இனிமேல் யாரும் தேவையில்லாமல் மீடியாவை சந்திக்க வேண்டாம். தேவையில்லாமல் யாரிடமும் எதையும் பேச வேண்டாம். இதற்கு மேலும் நீங்கள் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களிடம் இருக்கும் அனைத்தும் நீங்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என உருக்கமாக எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் உள்பட சசிகலாவின் குடும்பத்தில் கோலோட்சும் முக்கிய நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான், தினகரன் புதிய கட்சி தொடங்குவது குறித்து, அறிவிப்பதாக நான் எதுவும் சொல்லவில்லை. தொலைக்காட்சிகளில்தான் அப்படி விவாதம் நடைபெற்றது அதிமுக அம்மா என்கிற பெயரிலே செயல்பட இருக்கிறோம் என்று கூறினார்.
திவாகரனோ நான் அப்படி சொல்லவில்லை என்கிற ரீதியில் மருத்துவத் துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இருவகை உண்டு. அப்போலோ மருத்துவமனையில் டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது கிளினிக்கல் டெத் என கூறுவர்.இதைத் தொடர்ந்து கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் உயிரைக் காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் முயற்சி எடுத்து வந்தனர். அப்போலோ மருத்துவர்களிடம் இருந்துதான் நான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன்.
அப்போலோ மருத்துவர்களிடம் கேட்டோம் என்று சொன்னாலே அது ரெட்டியிடம் கேட்டதாக புரிந்து கொள்ளப்படுகிறது. மருத்துவத்தில் கிளினிக்கல் டெத் ஆனவர்களை 24 மணி நேரத்துக்குமேல் பயாலஜிக்கல் டெத் ஆகாமல் பாதுகாக்க முடியாது என்பது மருத்துவர்களின் கருத்தாகும் எனக் கூறியுள்ளார். இன்று அல்லது நாளையோ சசிகலாவின் கணவரின் தரப்பிலிருந்தும் ஏதாவது விளக்கம் வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இப்போதைக்கு சசிகலா அவர்களது குடும்பத்திலுள்ள வாய்களை கட்டிப் போட்டுள்ளார். இருந்தாலும் இந்த விவகாரம் தமிழகம் தாண்டி டெல்லிவரை கடுமையாக பரவியுள்ளது இதன் எதிரொலி என்னவாக இருக்கும் என மிக விரைவில் தெரிந்து விடும்.