ஜெ.மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய மத்திய வருவாய்த்துறை அதிகாரியிடம் ஆணைய நீதிபதி துருவி, துருவி விசாரணை: 2

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய மத்திய வருவாய்த்துறை அதிகாரி, விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். ெஜயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த விசாரணை ஆணையம் சார்பில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்கலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில் ஆணையம் சார்பில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது கண்காணிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர், ஜெயலலிதா ஆலோசகர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த குடும்ப டாக்டர், ஜெயலலிதா உறவினர்கள், முன்னாள் தலைமை செயலாளர் உட்பட 20க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார்.இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை நடத்திய பலரிடம் மீண்டும் விசாரிக்கவும் விசாரணை ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை தவிர்த்து பொன்னையன், திவாகரன், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி ஆகியோரை விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு விசாரிக்க வேண்டும் மத்திய வருவாய்த்துறை அதிகாரி பாலமுருகன் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஜெயலலிதா மரணம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சேலம் மாவட்ட கலெக்டர் மூலமாக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடந்த ஜனவரி 2ம் தேதி மனு அனுப்பினேன் என்றும், அதன் மீது நடவடிக்கை இல்லை. எனவே, சகாயம் தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து முக்கிய பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டு வைத்து அவர்களை விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மத்திய வருவாய்துறை அதிகாரி பாலமுருகன் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பினார். அதன்பேரில், பாலமுருகன் நேற்று காலை 10.40 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜரானார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது, அவரிடம் ஜெயலலிதா சிசிச்சை தொடர்பாகவும், மேலும், ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என்று பாலமுருகனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பாலமுருகன் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.