India

ஜெ., மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய சசிக்கு 7 நாள் கெடு

சென்னை: சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்கி, விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி, கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினார். இதில் 20க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.இதில், விசாரணையில் சாட்சியம் அளித்த பலர் சசிகலாவின் பெயரை குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. மேலும், 28 பிரமாண பத்திரங்களும், 422 புகார் மனுக்களும் பெற்றப்பட்டுள்ளன. அதிலும், சசிகலா மீது குற்றச்சாட்டு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, விசாரணை ஆணையம் சார்பில் சசிகலாவுக்கு டிசம்பர் 21ம் தேதி சம்மன் ஒன்று அனுப்பியது. அதில், ‘உங்களுக்கு எதிராக சிலர் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே, நீங்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்க முடியும் என்று கருதினால் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ அல்லது பிரமாண வாக்குமூலமாகவோ உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம். இதன் பின்னர் தேவைப்படும் போது உங்களை சாட்சியம் அளிக்க நேரில் அழைப்போம்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஜனவரி 5ம் தேதி ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் விவரங்களை ஆணையம் தர வேண்டும். நீங்கள் விவரம் அளித்த நாளில் இருந்து 15 நாட்களுக்குள், நாங்கள் எங்களது வாக்குமூலத்தை பதிவு செய்கிறோம்’ என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து, ராஜா செந்தூர்பாண்டி, கடந்த 12ம் தேதி விசாரணை கமிஷனில் மீண்டும் புதிய மனு ஒன்றை அளித்தார். அதில், நீதிபதி விசாரணை நடத்திய பிறகு சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அதன்பிறகு 15 நாட்களில் சசிகலா பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்வார்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது மீண்டும் கடந்த 25ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது, சசிகலா தரப்பு கேட்டதை அனுமதித்தால், விசாரணையை முடிக்க 15 ஆண்டுகள் ஆகும் என்று நீதிபதி தெரிவித்தார்.
ஆனாலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர், அனைத்து விசாரணையையும் முடித்துக்கொண்டு அந்த ஆவணங்களை தரும்படியும்,காலதாமதம் செய்யாமல் 15 நாளில் பதில் அளிப்பதாகவும் கூறினார்.

இதை தொடர்ந்து நேற்று இந்த மனு மீது இறுதி முடிவை அறிவிப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் விசாரணை ஆணையம் முன்பு மீண்டும் ஆஜரானார். அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார், அரசு டாக்டர் பாலாஜி, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரது விசாரணை இன்னும் முடிவடையாத காரணத்தால், இவர்களை தவிர்த்து மற்றவர்களின் சாட்சியங்களின் நகல்களை பெற்றுக்கொள்ள ஆணையம் அனுமதி அளிக்கிறது. அதே வேளையில் சசிகலா தரப்பு பிரமாண வாக்குமூலத்தை 7 நாட்களுக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.சசிகலா தரப்பு வழக்கறிஞர் தங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்படி ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் நகல் இலவசமாக சசிகலாவுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலமாகவும், அவரின் வழக்கறிஞருக்கு நேரடியாகவும் அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து 15 நாட்களுக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது.

எனவே, சாட்சிகளின் வாக்கு மூலம் நகல் கொடுத்த 15 நாட்களில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யலாம். சசிகலாவுக்கு எதிராக ஏற்கனவே சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்யலாம். அதே போல் இனிவரும் காலங்களிலும் நாங்கள் விசாரணை நடத்தும் போது, சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படுகிறது அல்லது நீதிபதி விசாரணையை முடித்த பிறகு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யலாம். சசிகலா தரப்பில் சாட்சிகள் இருந்தால் அவர்களை அழைத்து ஆணையத்தில் விசாரணை நடத்திக் கொள்ளலாம். மனுதாரர் வசதியான நாட்களில் குறுக்கு விசாரணை செய்யலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: விசாரணை ஆணையத்தில் இதுவரை 27 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் 6 பேர். 20 பேர் கமிஷன் அனுப்பிய சம்மனில் ஆஜரானவர்கள். இதில், பூங்குன்றன், சிவக்குமார், பாலாஜி ஆகியோரிடம் முழுமையாக விசாரணை முடிவடையவில்லை. நேற்று ஆஜரான வெங்கட்ரமணன் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, ஆணையத்தில் சாட்சியம் அளித்த 22 பேரின் வாக்குமூலத்தின் நகல்கள் சசிகலா, அவரது வழக்கறிஞருக்கு தரப்பட்டுள்ளது. அவர்கள், சாட்சியத்தின் நகலை படித்து பார்த்து, தங்கள் தரப்பில் யாரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அவர்களிடம் விசாரணை செய்யலாம்.
அதுவும் மனுதாரருக்கும் சவுகரியமான நேரத்தில் சாட்சிகளிடம் விசாரணை செய்யலாம். 12ம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆணையம் விசாரணை நடத்துகிறது. அப்போது, ஜெயலலிதாவின் டிரைவர் ஐயப்பன், 15ம் தேதி அலுவலக உதவியாளர் கார்த்திகேயனிடம் நீதிபதி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். அப்போலோவும் சாட்சியம் அளித்தவர்களின் நகலை கேட்டுள்ளது.
அவர்களுக்கும் 22 பேரிடம் வாக்குமூல நகலை அளித்துள்ளோம். அப்போலோ தரப்பில் தங்களுக்கு எதிராக சாட்சியங்கள் தேவைப்பட்டால் விசாரிக்க அனுமதிக்கப்படும்’ என்றார்.

நீதிபதி உத்தரவை ஏற்க முடியாது:

விசாரணை ஆணைய உத்தரவு பற்றி, சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறும் போது, சசிகலாவுக்கு எதிராக சாட்சிகள் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்த 15 நாட்களுக்கு பிறகு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வோம் என்று மனுவில் கூறியிருந்தோம். ஆனால், 7 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது, ஏற்க முடியாதது. இனி வரும் காலங்களில் சாட்சிகள் அளித்தவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தும் போது, குறுக்கு விசாரணை செய்து கொள்ளலாம் அல்லது ஓரிரு நாட்களில் விசாரணை செய்யலாம் என்று நீதிபதி கூறியுள்ளார். சசிகலா சிறையில் இருப்பதால், அவரிடம் இதுதொடர்பாக கலந்தோசித்து குறுக்கு விசாரணை செய்ய முடியாது. எனவே, நீதிபதியின் இந்த உத்தரவு குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை அதாவது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top