India

ஜெ., மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலா மனு மீது இன்று முக்கிய முடிவு

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணையில் ஜெ.வின் தனிப்பிரிவு செயலாளர் வெங்கட்ரமணன் இன்று நீதிபதி முன்பு ஆஜராகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுவரை நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவருடைய ஆட்சியின் போது அலுவலக அதிகாரிகளாக இருந்த 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான வெங்கட்ரமணன், முதன்மை செயலாளர் விஜயக்குமார், ராமலிங்கம், ஜெயமுரளிதரன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதா கார் டிரைவர் ஐயப்பன் ஆகியோரை விசாரிக்க கமிஷன் முடிவு செய்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், ஜெயலலிதாவின் 3வது தனிப்பிரிவு செயலாளராக இருந்த வெங்கட்ரமணன் நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் இன்று ஆஜராகிறார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்துகிறார். ஜெயலலிதா உடல் நிலை குறித்தும், அவர் ஜெயலலிதாவை பார்த்தாரா, அரசு பணிகள் குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினரா என்பது குறித்து வெங்கட்ரமணனிடம் நீதிபதி கேள்வி கேட்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இன்று முக்கிய முடிவு: சசிகலா வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கடந்த 12ம் தேதி விசாரணை கமிஷனில் புதிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், சசிகலாவிற்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளிக்கும் படி கோரிக்கை வைத்தார்.
இந்த மனு மீது கடந்த 25ம் தேதி விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் சசிகலா தரப்பு கேட்டதை அனுமதித்தால் விசாரணையை முடிக்க 15 ஆண்டுகள் ஆகும் என்று நீதிபதி தெரிவித்தார். ஆனாலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர் அனைத்து விசாரணையையும் முடித்து கொண்டு அந்த ஆவணங்களை தாருங்கள், காலதாமதம் செய்யாமல் 15 நாட்களில் பதில் அளிப்பதாக கூறினார். இதை தொடர்ந்து இந்த மனு மீது 30ம் தேதி உத்தரவிடுவதாக நீதிபதி ஆறுமுகச்சாமி தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top