தயா மாஸ்டரை தாக்கியவர் கைது; நீதிமன்றில் ஆஜர்

விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளரும், ‘டான்’ தொலைக்காட்சியின் இயக்குனருமான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
நேற்றுமுன்தினம் பிற்பகல் 3.45 மணியளவில் கொக்குவிலில் உள்ள ‘டான்’ தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அலுவலகத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தினார். கைகளால் தாக்கிய அவர், கதிரையாலும் தாக்கியமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராக்களில் பதிவாகியுள்ளன.
பின்னர் சுதாரித்துக் கொண்ட தயா மாஸ்டரும் அங்கிருந்தவர்களும் கத்தியுடன் நுழைந்து தாக்க முயற்சித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்ட நபர் கொக்குவில் பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கான அனுமதியை ‘டான்’ தொலைக் காட்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக கேபிள் சேவையை வழங்கும் நபர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரும் ‘டான்’ தொலைக்காட்சியுடன் சிலர் முரண்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே நேற்று முன்தினம் நபர் ஒருவர் தொலைக்காட்சி நிலையத்துக்குள் சென்று தயா மாஸ்டரை தாக்கியுள்ளார். அவருடைய வீட்டுக்கான கேபிள் தொடர்பு துண்டிக்கப் பட்டமையால் மதுபோதையில் வந்த நபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக ‘டான்’ தொலைக்காட்சி சார்பில் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய 52 வயதுடைய மோசஸ் சற்குணதாஸ் என்ற நபர் நேற்றுமுன்தினம் முதல் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, நேற்று மாலை நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட்டார். இந்தத் தாக்குதலில் சிறு காயங்களுக்கு உள்ளான தயா மாஸ்டர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.