News

நிதி மோசடி வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க ஆராய்கிறது சட்டமா அதிபர் திணைக்களம்.

பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் வழிகாட்டலுடனேயே இது தொடர்பிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ சட்ட நடவடிக்கைகள் கோரி, எட்டு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பதாக சட்டமா அதிபர் ஜயசூரிய தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த எட்டு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளிலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகளதும் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பணிப்பாளர்களதும் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்தார். அறிக்கைகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

இந்த அறிக்கைகள் பொருளாதார அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி ஆய்வு நிறுவனம், கண்டி மருத்துவ அத்தியட்சகர் அலுவலகம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, ரூபாவாஹினி கூட்டுதாபனம் மற்றும் ​தேசிய இளைஞர்கள் சேவை சபை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

அத்துடன் ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் விமரசேன ரூபசிங்க, பணிப்பாளர் சந்திரபால லியனகே, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரேனுக்கா துஷ்மந்த பெரெரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சபையின் முன்னாள் தலைவர் லலித் பியும் பெரெரா ஆகியோருக்கு எதிராகவும் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top