பசிலின் சொத்துக்கள் ஒரு தமிழரின் பெயரிலேயே உள்ளது .

இனங்களிடையே காணப்படும் சந்தேகங்கள் களையப்படவேண்டும். இனவாதத்தினை தோற்கடித்து இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அனைவரையும் ஒன்றுபடுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் பிள்ளையாரடியில் போட்டியிடும் ஜி.ஜினேஸ் கண்ணாவினை ஆதரிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், பிழையான அரசியலை மாற்றவேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்களிடம் மக்கள் விடுதலை முன்னணி வந்துள்ளது.
இந்த நாட்டினை கடந்த 70 வருடமாக ஆட்சி செய்தவர்கள் எதனையும் மக்களுக்கு செய்யவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையே இருந்து வருகின்றது. சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் ஏற்படுத்தியுள்ளனர். இங்கு ஆயுதப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆயுதப்போராட்டங்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகளாவர். வடகிழக்கில் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் இந்த போராட்டத்தில் கொல்லப்படவில்லை. இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் பதில் கூறவேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்களே. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுப்பவர்கள். இந்த நாட்டிலேயே இறந்து பசளையாக மாறுகின்றவர்கள். நாங்கள் அனைவரும் இந்த நாட்டில் ஒன்றுபட்டு வாழவேண்டிய தேவையுள்ளது. தமிழர்கள் சிங்களவர்களையும், சிங்களவர்கள் தமிழர்களையும் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையே இன்றும் இருந்துவருகின்றது.
இவ்வாறான நிலையினையே இன்றைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இனங்களுக்கிடையே ஏற்படும் பிரிவினைகள் அரசியல்வாதிகளுக்கு இலாபமாக மாற்றப்படுகின்றது. இந்த நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்துவதில் மிகவும் சிறப்பான முறையில் மகிந்த ராஜபக்ஸ செயற்பட்டுவருகின்றார். விக்னேஸ்வரனின் பிள்ளைகள் வாசுதேவ நாணயக்காரவின் பிள்ளைகளை திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு இடையில் எந்த இனமுரண்பாடுகளும் இல்லை.
பசில் ராஜபக்ஸவின் சொத்துக்கள் நடேசன் என்ற தமிழரின் பெயரில் உள்ளது. அவர்கள் சிங்களவர் தமிழர் என ஒன்றாகவே உள்ளனர். எங்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நாங்கள் கீழ் மட்ட வகுப்பினர், அவர்கள் எல்லோரும் மேல்மட்ட வகுப்பினர். மேல் மட்டத்தில் உள்ள அவர்கள் ஒன்றாகவே இருக்கின்றனர். கீழ் மட்டத்தில் உள்ள நாங்கள்தான் பிரிந்து வாழ்கின்றோம்.
நாங்கள் பிரிந்துவாழ்வதே இவ்வாறான மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு இலாபமாக இருக்கின்றது. எமது பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். தொழில் இல்லா பிரச்சினை, கல்வி பிரச்சினை என ஏராளமான பிரச்சினை. ஆனால் எமது அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு அந்த பிரச்சினை எதுவும் இல்லை. அவர்களுக்கு இந்த நாட்டில் பல்வேறு இடங்களில் வீடுகளும் உள்ளன. நாங்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் நிதி அரசியல்வாதிகள் மூட்டைகளில் கட்டிக கொள்கின்றனர்.
இந்த நாட்டினை சூறையாடுபவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்த கள்வர்கள் அகற்றப்பட வேண்டும். ஊழல்மோசடிகள் நடைபெறாத வகையில் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இந்த நாட்டில் கொள்ளையடிக்காத திருடாத, ஊழல்செய்யாத ஒரெ ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி மட்டுமேயுள்ளது என அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.