News

படுகொலை நடத்தியவர்களை பாதுகாக்கும் மைத்திரி: அனந்தி

தமிழினப் படுகொலை நடத்தியவர்களை பாதுகாக்கும் இலங்கை ஜனாதிபதி ஊழல் மோசடிகளுக்கு எதிராக வாளைச் சுழற்றுவதானது உண்மையில் விந்தையாக உள்ளது என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யார் தவறு செய்தாலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அனைவருக்கும் கட்சி பேதமின்றி உச்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றங்களை பெரிதும் பாதிக்கும் விடயமான ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. இலங்கையைப் பொறுத்தவரை அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றின் பெருந்தடையாக நாட்டில் நீடித்துவந்த யுத்தமே காரணமாகும்.

தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தி சிங்கள பௌத்த மேலாதிக்கம் மிக்க நாடாக இலங்கையை உருவாக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தமே, நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்ற கொடிய யுத்தத்தின் தோற்றுவாயாகும்.

இலங்கைத் திருநாட்டின் பூர்வ குடிகளான தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலை குற்றங்களுக்கு உரிய நீதியை வழங்காது உண்மையான நல்லிணக்கத்தையோ, நிலையான சமாதானத்தையோ ஏற்படுத்திவிட முடியாது.

இந்நிலையில், இலங்கைத் திரு நாட்டின் குடிமக்களாகத் திகழ்ந்து வரும் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்புக் கூறலை முற்றுமுழுதாக மறுத்துவரும் ஜனாதிபதி ஊழல் விடயத்தை முன்னிலைப்படுத்துவதானது உண்மையில் விந்தையாக இருப்பதுடன் இனப்படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாப்பதுடன் அவற்றை மூடிமறைக்கும் தந்திரமாகவும் அமைந்துள்ளது.

ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் மறு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் விதத்தில் தமிழர்கள் விடயத்தை அணுகிய முன்னைய ஆட்சியாளர்களின் வழியேதான் மைத்திரிபால சிறிசேனவும் பயணித்து வருவதனை அவரது செயற்பாடுகள் உணர்த்தி வருகின்றது.

மின்சாரக் கதிரை பற்றிய அச்சம், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் வரவழைத்தல் போன்ற விடயங்கள் நல்லாட்சி காலத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக கூறிவருவதன் மூலம் தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட தலைவர்களையும், இராணுவத்தினரையும் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பதனை மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தனது வாள் வீச்சுக்கு தப்ப முடியாது என்று முழங்கும் மைத்திரிபால சிறிசேன தமிழினப் படுகொலையாளிகள் மீதும் அதே வேகத்தை காட்ட வேண்டும். கட்சி, பதவி, அந்தஸ்த்து என்பவற்றை பொருட்படுத்தாது இனப்படுகொலையாளிகள் மீதும் உடனடியான நடவடிக்கையினை எடுப்பதன் மூலமே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதுவே இலங்கைத் தீவில் நீடித்து நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கான ஒரே தீர்வாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top