பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதில் இலங்கை தோல்வி

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்விகண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியுள்ளது. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு முன்வைக்கப்படாமல் சந்தேகத்துக்குரியவர்களை மாதங்களாக, வருடங்களாக தன்னிச்சையாக தடுத்துவைக்கவும், சித்திரவதை உட்பட துஷ்பிரயோகங்களை செய்யவும் கடந்த சில தசாப்தங்களாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பேசுகின்றதே தவிர, செற்பாட்டு ரீதியில் எதுவும் இடம்பெறவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குநர் ப்ரட் எடம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் அதிகூடிய கரிசனையை செலுத்தி, சர்வதேச தரங்களுக்கு அமைவான ஒரு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 46 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த காலத்திலும் மற்றும் நிகழ்காலத்திலும் இடம்பெற்ற சித்திரவதைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் உள்ளிட்ட துஷ்பிரயோகங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தடுப்புக்காவில் முன்னர் வைக்கப்பட்டிருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பணியாற்றிய சட்டத்தரணிகள் ஆகியோருடன் மேற்கொண்ட நேர்காணல்களின் அடிப்படையில், இலங்கையில் தொடர்ச்சியாக சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பங்களிப்பு செய்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 17 பதிவுகள் தொடர்பான ஆவணங்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது. எனினும், சட்டத்தின் தாக்கத்தின் தன்மையை அது வெளிப்படுத்தி இருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.