பாகிஸ்தானின் பலூசிஸ்தான் சட்டசபை அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாண சட்டமன்றம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் சனாவுல்லா ஜெரி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் ஜெரி திடீரென தன் பதவியை ராஜினாமா செய்ததால் சட்டமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டதால் குவெட்டாவில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சட்டசபையை சுற்றி 300 மீட்டர் சுற்றளவுக்கு உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் பதவி விலகிய சிறிது நேரத்தில் சட்டசபை அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இது போலீசாரின் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.