பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 8 பேர் பலி

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 8 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் வடகிழக்கு பழங்குடியின பகுதியில் குர்ரம் ஏஜென்சி என்ற இடம் உள்ளது. ஆப்கான் எல்லையையொட்டியுள்ள இப்பகுதி அடிக்கடி வன்முறை ஏற்படும் பகுதி ஆகும். இங்குள்ள முக்பல் பகுதியில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்றில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 8 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் கார் சிக்கியது. இந்த வெடி குண்டு தாக்குதலில் சிக்கி கார் தூக்கி வீசப்பட்டு முழுவதும் சேதம் அடைந்தது. காரில் இருந்தவர்களில் 3 பெண்கள் மற்றும் இரண்டு சிறுமிகள், 3 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெளிவாக வெளியிடப்படவில்லை.
இந்த தாக்குதலையடுத்து, சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் நிகழ்விடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எந்த ஒரு இயக்கமும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.