பாகிஸ்தானில் 8 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஜைனப் கடந்த 5-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்தது. சிறுமியின் உடல் 9ம் தேதி இரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஜைனப்பின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இம்ரான் அலி என்பவர் கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். ஆனால் டி.என்.ஏ. சோதனை அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்படும் என போலீசார் கூறினர்.
இம்ரான் அலியை போலீசார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தினர். ஆனால் சாய்நப்பின் குடும்பத்தார் இம்ரான் குற்றவாளியாக இருக்க மாட்டார் என கூறியதால் அவர் வெளியே விடப்பட்டார்.
கடந்த 10-ம் தேதி சிறுமியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்திய போது இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.