பாலியல் தொல்லை: அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அணி முன்னாள் டாக்டருக்கு 175 வருடம் ஜெயில்

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் ஜிம்னாஸ்டிக் அணி முன்னாள் டாக்டர் லேரி நாசருக்கு 175 வருட தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் டாக்டராக செயல்பட்டு வந்தவர் லேரி நாசர் (54). மிச்சிகன் மாநில யுனிவர்சிட்டியிலும் வேலை பார்த்தவர். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் வீராங்கனைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் இவர் மீது செக்ஸ் புகார் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளது. ஆனால் தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பின் விவரத்தை வெளியிட்டார். அதில்,
லேரி நாசருக்கு 175 வருடம், அதாவது 2,100 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
ஏற்கனவே, இவர் மீது குழந்தைகள் தொடர்பான ஆபாச கிராபிக்ஸ் வீடியோக்கள் வைத்திருந்த வழக்கு தொடர்பாக 60 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.